295 மாணவ விஞ்ஞானிகளை உருவாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு அப்துல் கலாம் விருது!

551 0

கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,  அறிவியல் ஆசிரியர் தனபாலுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.

வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருக்கும் தனபால், கடந்த 12 ஆண்டு காலம்,  மருத்துவ விடுப்பு எடுக்காமல், தனக்குக் கிடைத்த முதுகலை இயற்பியல் ஆசிரியர் பதவி உயர்வை மாணவர்கள் நலன் கருதித் துறந்து,’கிராமப்புற மாணவர்கள் விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும்’ என்ற நோக்கில் பணியாற்றிவருகிறார். ராமேஸ்வரத்தில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இவரது  சமூகப் பணியைப் பாராட்டி காஞ்சிபுரம் முத்தமிழ் மையம் சார்பில், ஆசிரியர் தனபாலுக்கு ,அப்துல்கலாமின் பேரன் சேக் சலீம் மற்றும் காஞ்சி முத்தமிழ் மன்றம் இயக்குனர் லாரனஸ் ஆகியோர், அப்துல் கலாம் விருதை வழங்கி கௌரவித்தனர் .

ஆசிரியர் தனபால், கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் பண்பாட்டில் தனிக் கவனம் செலுத்தும்விதமாக, பள்ளியில் இளம் வஞ்ஞானிகள் குழு ஆரம்பித்து, தனது வழிகாட்டுதல் மூலம் 12 ஆண்டுகளில் 16 கண்டுபிடிப்புகளை உருவாக்க வைத்துள்ளார். மேலும், ஜப்பான் அறிவியல் கருத்தரங்கத்துக்குத் தேர்வான 4 மாணவர்களில், 2 மாணவர்கள் ஜப்பான் சென்று , அந்நாட்டின் அறிவியல் தொழில்நுட்பங்களைக் கற்று இந்தியா திரும்பியுள்ளனர். பள்ளி , மாவட்டம், மாநிலம், தென்னிந்திய, தேசிய அளவில் பல்வேறு அறிவியல் கண்காட்சிகளில் பங்குபெற்று, இவரது 295 மாணவர்கள் இளம் விஞ்ஞானிகள் சான்று பெற்றுள்ளனர்.
‘கனவு காணுங்கள் தூக்கத்தில் வருவதல்ல கனவு, உன்னை தூங்க விடாமல் செய்வதுதான் கனவு’ என்ற அப்துல் கலாமின் கனவான 2020 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வேண்டும் என்பதைத் தனது சீரிய முயற்சியால் நாட்டின் வருங்காலத் தூண்களான மாணவர்களை செவ்வனச் செதுக்கும் நோக்கில் தனபால் செயல்பட்டுவருகிறார். அப்துல் கலாமின் நினைவுகளையும், கனவுகளையும் இளம் விஞ்ஞானிகள் குழு மாணவர்களால் நடித்து, ஐ.சி.டி தொழில் நுட்பத்தில், ஆசிரியர் தனபாலின் சொந்த முதலீட்டில் இயக்கித் தயாரிக்கப்பட்ட ‘டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு’ ஆவணப்படத்தை சமூக ஆர்வலர்களின் துணைக்கொண்டு, தமிழகம், தென்னிந்தியா, தேசிய, சர்வதேச அளவில் ஜப்பான் உட்பட 950 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமின்றி, 1100 டிவிடி வழங்கி, அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆறு லட்சம் மாணவர்கள் மனதில் கலாம் கனவுகளை விதைத்துள்ளார்.

தமிழக அரசு, பள்ளிக் கல்வித்துறை நடத்தும் தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஆசிரியர் படைப்புப் பிரிவில் ஆசிரியர் தனபால் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் 2014 – 2017 கலந்துகொண்டு, தென்னிந்திய அளவில் இரண்டாம் பரிசும் ,விருதும், பாராட்டுப்பத்திரமும் பெற்றுள்ளார். நீர் மேலாண்மை, சுற்றுச்சூழல், விவசாயம், எலெக்ட்ரானிக்ஸ் துறையில் அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கி, சர்வதேச அளவில் மாணவர்களுடன் தாமும் வழிகாட்டி ஆசிரியராக, பேருந்து, இரயில், கப்பல், விமானப் பயணம் என 56,000 கி,மீ பயணித்துள்ளார்.

இவருக்கு விருது வழங்கிய அப்துல் கலாமின் பேரன், “என் தாத்தாவின் கனவை நனவாக்கும் ஆசிரியர் நீங்கள். உங்களுக்கும் உங்க மாணவர்களுக்கும் மேலே இருந்து தாத்தா பூ தூவி வாழ்த்திக்கொண்டிருப்பார்” என்று பெருமிதமாகக் குறிப்பிட்டு விருதை  வழங்கியுள்ளார்.

Leave a comment