அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு அஞ்சப் போவதில்லை-செஹான்

226 0

சபாநாயகர் நாட்டின் இயற்றப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம் பதவி வகிக்க வேண்டுமே தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பிரதமரால் எழுதப்பட்ட அரசியலமைப்புக்கு அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் அபிலாஷைகளையே நாம் பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்றோம் அங்கு மக்களின் விருப்பங்களே நிராகரிக்கப்பட்டது. பாராளுமன்ற சம்பிரதாயங்களை காரணம் காட்டி சபாநாயகர், எதிர்கட்சி தலைவர் பதவியை எமக்கு வழங்க முடியாது என்றும் இது பாராளுமன்ற கோட்பாடுகளுக்கு முரணானது எனவும் குறிப்பிட்டார்.

இதுவரை காலமும் அரசாங்கம் இரகசியமாக தேசிய சட்டத்தில் மாற்றங்களை செய்துள்ளது. அரசாங்கத்தின் தேவைக்கு மாத்திரம் அரசியலமைப்பினை மாற்றும் போது ஏன் மக்களின் விருப்பத்திற்காக அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. ஐக்கிய சுதந்திர முன்னணியின்  உறுப்புரிமையினை துறந்து தான்  எதிர்கட்சி தலைவர் பதவியை பெற வேண்டும் என்ற அவசியம் எமக்கு கிடையாது. இதற்கு  மக்களே எதிர்வரும் மாகாண சபை தேர்தலில்  பதிலடி கொடுப்பார்கள்.

அத்துடன் தேசிய அரசாங்கமானது கடந்த அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியே மக்களுக்க வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தினையும் மறந்து விட்டது.  எனினும் இவ்வாறு சுமத்தப்படும் குற்றங்கள் ஏதும் இதுவரை காலமும் முழுமைப் பெறவில்லை. ஆகவே  அரசாங்கத்தின் இது போன்ற செயற்பாடுகளை கண்டு  ஒருபொதும்  அஞ்சப்போவதில்லை என்றார்.

Leave a comment