வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் விடுவிக்கப்பட்ட காணிகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளையும் சேவைகளையும் வழங்குவதற்கு தமது அரசாங்கம் உதவிவருவதாக பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கம் வழங்கும் 10 இலட்சம் ஸ்ரேர்லிங் பவுண் நிதியுதவி மூலம் மீளக்குடியமர்ந்த 600
குடும்பங்கள் வரை பயன் பெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜெனீவா பொறுப்புக்கூறல்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதனை ஊக்குவிப்பதில், பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்கள் தமது வகிபாகத்தை செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போர் அனர்த்தங்களால் விளைந்த பாதிப்புக்களை சமாளிக்கும் முயற்சிகளில், இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்த உதவுவது முக்கியமான அம்சமாகும். இது போருக்குப் பிந்திய காலப்பகுதியில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசாங்கமும் இணக்கம் கண்ட கூட்டு மூலோபாயத்தின் பிரதான விடயமாகவும் திகழ்கிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் நிதியுதவியின் மூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களில் மக்கள் மீளக் குடியமர்வதற்கு பல்வேறு வழிகளில் உதவிகள் வழங்கப்படவுள்ளன.
இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல் மற்றும் பொலிஸ் மற்றும் இராணுவ மறுசீரமைப்பு என்பன அடங்களாக சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை ஊக்குவிக்க பிரித்தானிய அரசாங்கம் தற்போது ஆதரவளித்து வருகின்றது.
பிரித்தானியாவின் மோதல் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிதியத்தினால் இவற்றுக்கான நிதி உதவி வழங்கப்படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.