சுதந்திர தினத்தன்று சென்னை கோட்டைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதான காவலாளி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு மிரட்டல் அழைப்பு வந்தது.
சென்னை கோட்டையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது 9 மணிக்கு வெடிக்கும். முதல்-அமைச்சர் கொடி ஏற்ற முடியாது. முடிந்தால் தடுத்து பாருங்கள் என கூறி விட்டு இணைப்பை துண்டித்தார்.
இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மிரட்டல் வந்த செல்போன் எண் மூலம் நடத்திய விசாரணையில் கோவையில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக சென்னை போலீசார் கோவை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவரது முகவரியில் அந்த செல்போன் எண் பெறப்பட்டிருந்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை பிடித்து விசாரித்தனர். அவர் அந்த எண்ணை 6 மாதங்களுக்கு முன்பே ஒப்படைத்து விட்டதாக கூறினார்.
இதையடுத்து மிரட்டல் வந்த நம்பரில் இருந்து யார்- யாருக்கெல்லாம் பேசுகிறார்கள்? எங்கிருந்து பேசுகிறார்? என விசாரணை நடந்தது. இதில் கோவை ஒசூர் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்க்கும் மகாராஜன் என்ற மாரிராஜா (வயது 38) என்பவர் சிக்கினார். அவரை பிடித்து விசாரித்த போது கோட்டைக்கு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
மாரிராஜாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி ஆகும். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 வருடங்களாக கோவையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
தற்போது பணியாற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் போலீசாரிடம் கூறுகையில், நான் வேலை செய்த இடத்தில் நிற்கும் போது அந்த வழியாக காரில் செல்லும் அதிகாரிகள் என்னை கண்காணிக்கிறார்கள். இதனால் தான் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டினேன் என்றார். மேலும் சொன்ன பதிலையே திரும்ப, திரும்ப சொல்கிறார். அவர் கூறியதை வாக்குமூலமாக பதிவு செய்தனர்.
பின்னர் மாரிராஜா மீது தகாத வார்த்தைகள் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
மாரிராஜாவை வருகிற 29-ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து மாரிராஜா கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.