திருப்பதி மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றியும் மாடவீதிகளிலும் குவிந்திருந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, கடந்த 11-ந் தேதி சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி மகா கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது.
12-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. அன்றைய தினமே மூலவர் ஏழுமலையான் மற்றும் இதர சன்னதி தெய்வங்கள், உற்வச மூர்த்திகளின் ஜீவ சக்தி கலசங்களில் மாற்றி யாகசாலையில் நேற்று வரை வைத்து அர்ச்சகர்கள் யாகம் செய்தனர்.
13-ந் தேதி 8 வகையான பொருட்களை இடித்து அர்ச்சகர்கள் அஷ்டபந்தனம் தயாரித்தனர். மேலும் மூலவர் சன்னதி, இதர சன்னதிகளின் கோபுரங்களுக்கு மராமத்து பணி மேற்கொள்ளப்பட்டு தங்க கொடிமரம் புனரமைக்கப்பட்டது.
14-ந் தேதி அஷ்டபந்தன சமர்ப்பணம் நடந்தது. ஏழுமலையான் திருவடி மற்றும் பீடத்தின் இடைவெளியில் அஷ்டபந்தன பசை நிரப்பப்பட்டது. நேற்று சம்பிரதாய முறையில் கோவில் சுத்தம் செய்யப்பட்டது. மூலவருக்கு மகா சாந்தி அபிஷேகமும், பூர்ணாஹூதியும் நடந்தது.
இதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை 3 மணி முதல் 3.30 மணிவரை யாக சாலை பூஜை நடந்தது. பிறகு ஆகம விதிகளின்படி காலை 10.15 மணியளவில் அஷ்டபந்தன பாலாலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.
தலைமை தீட்சிதர் வேணு கோபாலசாமி தலைமையில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
மூலவர் ஏழுமலையானுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்த அதே நேரத்தில், வரதராஜ பெருமாள், வகுளமாதேவி, பாஷ்யகாருலவாரு, யோக நரசிம்மர், விஷ்வசேனர் சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவிலில் உள்ள மற்ற பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தில் இருந்து ஜீவசக்தியை மீண்டும் மூலவர், விமான கோபுரம், பரிவார மூர்த்திகளுக்கு சமர்ப்பித்தனர். பிறகு, மூலவர் ஏழுமலையானுக்கு நைவேத்தியம், அட்சததாரோ பணம், பிரம்மா கோஷா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் உள்ளே பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை இருந்தாலும் கும்பாபிஷேகத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றியும் மாடவீதிகளிலும் குவிந்திருந்தனர்.
இன்று மாலை ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்திலும், பின்னர் உற்சவர் மலையப்ப சாமி மட்டும் தனியாக கருட வாகனத்திலும் எழுந்தருளி கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலத்தப்படுத்தப் பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 11-ந்தேதி முதல் சிறப்பு தரிசனம், நடைப்பாதை தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் உள்பட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இலவச தரிசனத்தில மட்டும் குறைந்த அளவிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று இரவு 12 மணி முதல் வழக்கம் போல் அனைத்து தரிசனங்களும் தொடங்கும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அடுத்த மகா கும்பாபிஷேகம் 2030-ம் ஆண்டு நடக்கிறது.