தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு!

226 0

நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையினால் மாவட்டத்தில் பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நிரம்பியது. 

தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே நெல்லை மாவட் டத்தில் கடந்த மாதம் பெய்த மழையினால் 6 அணைகள் நிரம்பின. இந்த அணைகளில் இருந்து கார்சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஒடிசா வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்ட மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஏற்கனவே நிரம்பிய கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவி நயினார் ஆகிய 6 அணைகள் மீண்டும் நிரம்பியுள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து விடிய விடிய பெய்தது. பகல் முழுவதும் கொட்டி தீர்த்த மழை நேற்றும் தொடர்ந்தது. நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளில் இருந்து உபரி நீர் கூடுதலாக ஆறுகளில் திறந்து விடப்பட்டன. இதனால் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்த மழையினால் மாவட்டத்தில் பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நிரம்பியது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று 137.80 அடியாக இருந்தது. இன்று பாபநாசம் அணை 141 அடியை எட்டி நிரம்பியது. வினாடிக்கு 12 ஆயிரத்து 212 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பாதுகாப்பு கருதி கீழ் அணையில் இருந்து இன்று காலை 7 ஆயிரத்து 365 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சேர்வலாறு அணை பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் பாபநாசம் கீழ் அணை வழியாக வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் 146.52 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணை பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இன்று காலை வரை அங்கு 57 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 910 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் எதுவும் வெளியேற்றப்படவில்லை.

இதனால் நேற்று 75 அடியாக இருந்த மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து இன்று 79.6 அடியாக உள்ளது. இது போல கடனாநதி-83, ராம நதி-82.50, கருப்பாநதி-71.20, குண்டாறு-36.10, கொடு முடியாறு-52.50, அடவி நயினார்-132.22 என்று உச்ச நீர்மட்டத்தை அடைந்துள்ளது. தற்போது இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அனைத்தும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

இதுவரை நம்பியாறு மற்றும் வடக்கு பச்சையாறு அணைக்கு தண்ணீர்வரத்து இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று நம்பியாறு அணை பகுதியில் 6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் நம்பியாறு அணைக்கு தண்ணீர் வர தொடங்கி உள்ளது. வினாடிக்கு 528 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் சிறிய அணையான நம்பியாறு அணை ஒரே நாளில் 9 அடி உயர்ந்து இன்று காலை 20.57 அடியாக உள்ளது.

வடக்கு பச்சையாறு அணை பகுதியில் மழை இல்லாத தால் அந்த அணையின் நீர்மட்டம் உயரவில்லை.

மலை பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பாபநாசம் அணை பகுதிகளில் இன்று காலை வரை 58 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணை பகுதியில் 121 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நகர்புறங்களில் செங்கோட்டை பகுதியில் அதிகபட்சமாக 89 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

தொடர் மழையினால் தாமிரபரணி ஆற்றில் இன்று 2-வது நாளாகவும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அகஸ்தியர் அருவி மற்றும் பாபநாசம் தாமிரபரணி ஆறு பகுதியில் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

அதுபோல அம்பை, சேரன்மகாதேவி, பாளை, நெல்லை பகுதியிலும் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும், ஆற்றுக்குள் இறங்கி யாரும் குளிக்கக் கூடாது என்றும் அரசு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

நெல்லை குறுக்குத்துறை முருகன்கோவில் முழுவதும் தண்ணீரில் மூழ்கி மேல்பகுதி மட்டும் தெரிகிறது. தைப்பூச மண்டபங்களும் நீரில் மூழ்கி காட்சியளிக்கிறது. நெல்லை சந்திப்பு ஆற்றுப்பாலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி நடந்து வந்தது. தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கட்டுமான பகுதிகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதனால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.

ஆற்றில் வெள்ளம் அதிகரித்து தண்ணீர் கடலுக்கு செல்கிறது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்வாய் குளங்களுக்கு இன்னும் முழு அளவு தண்ணீர் செல்லவில்லை என்றும், அந்த பகுதியில் விவசாய பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே கடலுக்கு செல்லும் வெள்ள நீரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்வாய் பாசனத்திற்கு முழு அளவு திருப்ப வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

குண்டாறு-121, அடவி நயினார்-110, செங்கோட்டை -89, பாபநாசம்-58, மணிமுத்தாறு-57, சேர்வலாறு-50, தென்காசி-35, கடனாநதி- 32, கருப்பாநதி- 30, ராதாபுரம்-24, அம்பை- 22.6, சங்கரன்கோவில்-15, கொடுமுடியாறு-15, ஆய்க்குடி- 13.2, ராமநதி-12, நாங்குநேரி- 8, நம்பியாறு- 6, நெல்லை-5.5, பாளை-5.4, சிவகிரி-4, சேரன்மகாதேவி- 3.2. #

Leave a comment