மஹிந்த அணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகி சுயாதீனமாக பாராளுமன்றத்தில் செயற்பட்டால் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர முடியும். ஆனால் அவர்கள் அவ்வாறு மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகினால் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்துவிடுவார்கள் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்ச ரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மஹிந்த அணியினருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டுமானால் அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகவேண்டும். அவ்வாறு விலகினால் அந்த முன்னணியின் செயலர் அதனை சபாநாயகருக்கு அறிவிப்பார்.
ஆனால் அங்கு ஒரு சிக்கல் உள்ளது. அதாவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து மஹிந்த அணியினர் விலகி சுயாதீனமாக பாராளுமன்றத்தில் செயற்பட்டால் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோர முடியும்.
எனினும் அவர் கள் அவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து விலகினால் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்துவிடுவார்கள். அப்போது நாட்டில் புதிய அரசியல் நிலைமை உருவாகும் என்றார்.