ஜனாதிபதி, பிரதமரின் பெயர்களை பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக தெரிவித்து நிதி மோசடி செய்யும் நபர்களுக்கு எந்தவித மன்னிப்பும் இல்லை. அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
பிரதமர் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவருக்கு மிகவும் நெருக்கமானவர் எனவும் தெரிவித்து, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்து நிதி மோசடி புரிந்த நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளினால் கடந்தவாரம் அம்பாறை உகன பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டிருந்தார். இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தருவதாக தெரிவித்து பணம் அறவிடும் சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல் கிடைத்துவருகின்றது. பிரதமரின் செயலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஜேர்மனில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பணம் அறவிட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அதனால் நாட்டு பிரஜைகள் யாராக இருந்தாலும் வெளிநாட்டு தொழிலுக்கு செல்வதாக இருந்தால் அதற்குரிய முறையில் செல்லவேண்டும். அதற்காக அவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தங்களை பதிவுசெய்துகொள்ள வேண்டும்.
ஜனாதிபதி, பிரதமர் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஹரீன் பெர்ணாந்து மற்றும் பிரதி அமைச்சராக இருக்கும் எனது பெயரையோ அல்லது வேறு அமைச்சர்களின் பெயர்களையோ பாவித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக தெரிவித்து யாராவது பணம் அறவிடும் நடவடிக்கையை மேற்கொள்வதாக இருந்தால் அது மோசடி நடவடிக்கையாகும். இவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
வெளிநாட்டுவேலைவாய்ப்புக்காக செல்பவர்கள், யாருக்கும் பணம் கொடுக்கத்தேவையில்லை. அத்துடன் ஜப்பான், இஸ்ரேல் அல்லது கொரியா ஆகிய நாடுகளில் தொழில் வழங்கும்போது பணம் அறவிட எவருக்கும் அனுமதி வழங்கியதில்லை. அவ்வாறு பணம் அறவிடுவதாக இருந்தால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அனுமதிக்கப்பட்ட பணம் மாத்திரமே அறவிடப்படும். அதனை பணியகத்தின் இணையத்தளத்தினூடாக அறிந்துகொள்ளலாம்.
அதனால் மக்களின் அறியாமையை பயன்படுத்தி யாராவது ஜனாதிபதி, பிரதம ரின் பெயர்களை பிரயோகித்து பண மோசடிகளில் ஈடுபடுவது தொடர்பாக அறிந் தால் அதுதொடர்பில் எங்களுக்கு அறியத்தரவும். அது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்றார்.
4