தேசிய ஐக்கிய அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் கடந்த மூன்று வருடங்களில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று எஞ்சிய 15 மாதங்களிலும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கும்” என்று வீடமைப்பு பிரதி அமைச்சர் ஜே.சி. அலுவத்துவல தெரிவித்திருக்கிறார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தாவில் இன்று செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் நாட்டுமக்களால் அனுபவிக்க முடியாதிருந்த ஜனநாயக சுதந்திரங்களை தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் கீழ் கடந்த மூன்று வருடங்களில் அனுபவிக்க கூடியதாகவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
“தேசிய ஐக்கிய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பினையேற்கும் போது நாடு தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பின்னடைவிலேயே இருந்தது. ஆனால் அன்றிருந்த நிலை இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இம் மாதத்துடன் தேசிய அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டு மூன்று வருடங்கள் நிறைவடைகின்றன.
இந்த குறிப்பிட்ட காலத்தில் சர்வதேசத்தின் நல்லெண்ணத்தையும் வென்றெடுத்துள்ளளோம். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.பிளஸ் வரிச் சலுகையினையும் மீண்டும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. ஜி.எஸ்.பி வரிச்சலுகை தடைசெய்யப்பட்டிருந்த அந்த குறிப்பிட்ட காலத்தில் இலங்கைக்கு கிடைக்கவிருந்த சலுகைகளும் அந்நிய செலாவணியும் வியட்னாம், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு கிடைக்கப்பெற்றதுடன் இலங்கைக்கு பாரிய நட்டத்தையும் ஏற்படுத்தியிருந்து.
தேசிய அரசாங்கத்தில் ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீண்டும் பெற்றுக்கொடுக்கப்பட்டதனால் கடந்த அரசாங்கத்தினால் நாட்டுக்கு ஏற்பட்ட நட்டங்களை படிப்படியாக கட்டியெழுப்பக்கூடியதாக அமைந்துள்ளது.
எரிப்பொருளின் விலையை குறைக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தப்போதிலும் கடந்த அரசாங்கம் போர்ச் சூழல் நிறைவடைந்து குறித்த ஐந்து வருடங்களில் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காத சந்தர்ப்பத்திலும் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் எரிப்பொருட்களின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. கடந்த இரு மாதங்களில் எரிப்பொருட்கள் விலை அதிகரிக்கப்பட்டாலும் கடந்த அரசாங்கத்தில் இருந்த விலைச் சூத்திரத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க கூடிய வாய்ப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு கோரிக்கைகளை முன்வைக்கவும் கடந்த அரசாங்கத்தில் இல்லாத வாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.
அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் 10 ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமான தொகையால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் நாட்டுக்கு நட்டத்தை ஏற்படுத்தினவே தவிர இலாபத்தை பெற்றுதரவில்லை. கடந்த அரசாங்கம் அபிவிருத்திப்பணிகளுக்காக பெற்ற கடன்களையும் வட்டித் தொகைகளையும் தேசிய அரசாங்கமே செலுத்த வேண்டிய தேவை ஏற்ப்பட்டுள்ளது. அதேபோன்று சமுர்த்தி கொடுப்பனவுகளையும் இவ்வருடம் இறுதியை அடையும் போது அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
முக்கியமான மருந்து வகைகளின் விலைகளை குறைத்தமையினால் 5 மில்லியன் ரூபாவினை சேமிக்க கூடியதாகவும் அமைந்துள்ளது. மேலும் இம்மாதம் 21ஆம் திகதியாகும் போது தேசிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி செயற்த்திட்டங்களை மக்களுக்கு அறியப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.
இத்துடன் நிறுத்திவிடாமல் கம்பெரலிய வேலைத்திட்டத்தினூடாக அனைத்து கிராமங்களின் அடிப்படை தேவைகளை நிறைவுசெய்து அபிவிருத்தியைத் துரிதப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். எதிர்வரும் 15 மதங்களில் கிரமங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.” என தெரிவித்தார்.