சபாநாயகர் எமக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை வழங்க மாட்டார்- மஹிந்த

243 0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீன குழுவாக செயற்பட்டாலும் சபாநாயகர் தமக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை வழங்குவார் என்பதில் எவ்வித உத்தரவாதமும் இல்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (15) நீர்கொழும்பு பகுதியில் ஊடகங்களிடம் கருத்துத்  தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியிருந்தார்.   (மு)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்கு தெரிவாகியவர்கள் தனித்தனியாக வேண்டுகோள் விடுப்பார்களாயின், அவர்களுக்கு சுயாதீனமாக பாராளுமன்றத்தில் செயற்பட இடமளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத்தில் ஒரே கட்சியைச் சேர்ந்த இரு குழுவினர் ஆளும் கட்சியிலும், எதிர்க் கட்சியிலும் இருக்கின்ற போது எதிர்க் கட்சிப் பதவியை வழங்க முடியாது என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

பாராளுமன்றத்திற்கு போட்டியிட்டு தெரிவாக காரணமாகவிருந்த கட்சியிலிருந்து விலகினால், பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க வேண்டி வரும் என்ற சட்டச் சிக்கலும் இருக்கின்றது. இதற்கு மத்தியில் கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள 70 பேரும் தமக்கு எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை வழங்குமாறு கோரியுள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திலுள்ள 15 பேரும் தமது கட்சியை பொதுஜன பெரமுனவாக மாற்றினால், அவர்களது பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோகும் நிலை உள்ளது. ஆளும் கட்சியிலுள்ள நபர்கள் சுயாதீனமாக செயற்பட்டாலும், அக்கட்சி அரசாங்கத்தை விட்டு விலகும் வரையில் எதிர்க் கட்சியாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என சபாநாயகர் ஏற்கனவே விளக்கமளித்திருந்தார்.

Leave a comment