புகையிரத சேவைப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சம்பள பிரச்சினைக்கு இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மைக்காலமாக அரச சேவையில் உள்ள தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்ட போராட்டங்களின் காரணமாக பொது மக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டனர். அத்துடன் இவர்களின் இந்த போராட்டமானது பொருளாதாரத்திலும் நேரடியாக தாக்கம் செலுத்தியது.
ஒரு தொழிற்சங்கத்தினரது கோரிக்கையினை அரசாங்கம் நிறைவேற்றும்போது பிறிதொரு தொழிற்சங்கம் இதற்கு இணையாக போராட்டங்களை முன்னெடுக்கின்றது.
இதற்கு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்ள தற்போது அரச துறையில் நிலவும் சம்பளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளை அறிய ஒவ்வொரு துறையிலும் தெளிவு மற்றும் அனுபவம் கொண்ட விசேட ஆணைக்குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் அரச போக்குவரத்து சேவையில் இன்று பாரிய பிரச்சினையினை எதிர்கொண்டுள்ள புகையிரத சேவைப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சம்பள பிரச்சினைக்கு இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.