வேலூர் ஜெயிலில் பேரறிவாளனை தாக்கிய கைதி கடலூர் ஜெயிலுக்கு மாற்றம்

295 0

201609171029179785_perarivalan-attacked-in-vellore-jail-prisoner-cuddalore_secvpfவேலூர் ஜெயிலில் பேரறிவாளனை தாக்கிய கைதி கடலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். மற்றொரு கைதி சேலம் ஜெயிலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார். இவரை, கடந்த 13-ந் தேதி ஆயுள் தண்டனை கைதியான மதுரையை சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்பவர் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார்.

இதில் பேரறிவாளனுக்கு தலையில் 4 தையல் போடும் அளவுக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பேரறிவாளனை தாக்கிய கைதி ராஜேஷ்கண்ணா அதிக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஜெயில் ஆஸ்பத்திரியில் அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் கைதி ராஜேஷ் கண்ணாவுக்கு ஜெயிலில் வழங்கப்பட்டு வந்த அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டு தனி அறைக்கு அவர் மாற்றப்பட்டு அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த சம்பவம் குறித்து வேலூர் ஜெயிலில் பேரறிவாளன் மற்றும் ராஜேஷ் கண்ணாவிடம் சிறைத்துறை டி.ஐ.ஜி. முகமது அனீபா நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார். அப்போது ராஜேஷ்கண்ணாவுக்கு நாகர்கோவிலை சேர்ந்த கைதி செல்வம் என்பவர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. பேரறிவாளன் ராஜேஷ்கண்ணா வாக்குமூலங்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.

இந்த நிலையில், பேரறிவாளனை தாக்கிய கைதி ராஜேஷ் கண்ணா கடலூர் ஜெயிலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், பேரறிவாளனை தாக்குவதற்கு ராஜேஷ் கண்ணாவுக்கு உதவிய மற்றொரு கைதி செல்வம் சேலம் ஜெயிலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜேஷ் கண்ணாவும், செல்வமும் இன்று காலை கடலூர் மற்றும் சேலம் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.