உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என கருத்து கணிப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அங்கு சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக உள்ளார்.
403 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசத்தில் அடுத்து ஆட்சியை பிடிப்பது யார் என்று பார்லிமென்டெரியன் என்ற இதழ் கருத்துகணிப்பு நடத்தியது. உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைக்க 203 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கருத்து கணிப்பு முடிவு வெளியிடப்பட்டதில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 224 தொகுதிகளை கைப்பற்றி தனிபெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் அக்கட்சிக்கு வரும் தேர்தலில் 74 தொகுதிகளே கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 169 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. பா.ஜனதாவுக்கு 135 இடங்களும், காங்கிரசுக்கு 13 இடங்களும் கிடைக்கும் என்றும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கருத்து கணிப்பு தெரிவித்து இருக்கிறது.
அடுத்த முதல்-அமைச்சராக மாயாவதிக்கு 29 சதவீத பேரும், அகிலேஷ் யாதவுக்கு 25 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பா.ஜனதாவில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட வருண்காந்திக்கு 23 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.