கருணாநிதி தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து நாளை (திங்கட்கிழமை) முதல் விருப்ப மனு பெறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் முதல்கட்ட பணியாக சென்னை மாவட்டத்தில் உள்ள தி.மு.க. பகுதி மற்றும் வட்ட செயலாளர்களிடம் செயல்பாடுகள் தொடர்பான அறிக்கையையும் கட்சி தலைமை பெற்றுள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி., ஆர்.எஸ்.பாரதி, வி.பி.துரைசாமி மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது, உள்ளாட்சி பகுதிகளில் ஒவ்வொரு கட்சிகளின் பலம் என்ன? தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
காவிரி பிரச்சினையில் தி.மு.க.வினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அதில் எடுக்க வேண் டிய நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.கூட்ட முடிவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.