கிளிநொச்சி தீ விபத்து – பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு முதல்வர் நிதியுதவி

357 0

1474121706_downloadமாங்குளத்தில் அல்லது அதனை அண்டிய பகுதியில் விரைவில் தீயணைப்பு பிரிவை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவம் உணர்த்தியுள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பொதுச்சந்தையில் நேற்று இரவு இடம்பெற்ற தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 132க்கும் மேற்பட்ட வர்த்தகர்களை நேரில் சென்று சந்தித்த முதலமைச்சர், பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு 20 ஆயிரம் ரூபா வீதம் நிதியுதவி வழங்கி வைத்தார்.

கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்துள்ள பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தால் குறித்த சந்தைக் கட்டடம் தீக்கிரையாகியது.

இதனால் அங்கிருந்த 60இற்கும் மேற்பட்ட புடவைக் கடைகளும் அனைத்துப் பழக்கடைகளும் முற்றாக எரிந்துள்ளன. இதனால் பல கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு 8.30மணிஅளவில் ஏற்பட்ட தீ, அங்கு வீசிய கடும் காற்று காரணமாக சுவாலை விட்டு எரிந்ததுடன் ஏனைய கடைகளுக்கும் பரவியுள்ளது.

இதனால் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மக்களும் படையினரும் சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்னதாகவே அங்கிருந்த பெரும்பாலான கடைகளும் அதிலிருந்த பெறுமதியான பொருட்களும் அழிந்து நாசமாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சந்தைக் கட்டட தொகுதியை வடமாகாண முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு ஒரு தொகுதி நிதியுதவியும் வழங்கி வைத்தார்.

இதன்போது அங்கு கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர், இந்த அனர்த்தம் வர்த்தக சமூகத்தை பெரும் பாதிப்புக்குள் தள்ளியுள்ளதாகவும், இந்த விபத்தில் இருந்து ஓரளவு பாதுகாத்துகொள்வதற்கு இங்கு ஒரு தீயணைப்பு பிரிவு இல்லாதது பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு உள்ள வங்கிக்கடன்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

unnamed-117