ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்தின் மூன்று பீடங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி மூடுவதற்கு பல்கலைகழக அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூகவியல் மற்றும் மானுடவியல், முகைாமைத்துவம், பயன்முக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பீடங்களே நேற்று (08) பிற்பகல் முதல் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த பீடங்களின் விடுதிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் இடையே அம்மை நோய் பரவி வருகின்றமை காரணத்தால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
44 மாணவர்களுக்கு அம்மை நோய் பரவியுள்ளதாகவும், மேலும் சில மாணவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி இவ்வாறு மூடப்பட்டுள்ள அனைத்து பீடங்களும் ஆரம்பிக்கப்படும் என்பதால் மாணவர்களை 26 ஆம் திகதி மாலை விடுதிகளுக்கு வருமாறு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பேராசிரியர் ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.