உலக தமிழர்களின் உதயசூரியனாக இருந்து ஒளியூட்டிய கலைஞரின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முது பெரும் தமிழறிஞர், உலகத் தமிழர்களின் உன்னத தலைவர், தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் காலமானார் என்ற செய்தியை அறிந்து, பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என் மனதில் உணர்ந்தேன். கடுஞ்சுகயீனம் காரணமாகக் காவேரி மருத்துவ மனையில் அவர் சிகிச்சைப் பெற்று வந்த கடந்த சில நாட்களாக அவர் பற்றிய கரிசனயோடு நான் இருந்த அதேவேளை அவர் சுகம் அடைந்து உலகத் தமிழர்களுக்குத் தலைவனாகத் தொடர வேண்டுமென்ற பிரார்த்தனையே என் மனதில் இருந்தது. ஆயினும் காலம் அவர் உயிரைக் கவர்ந்து சென்று விட்டது. அவர் இயற்கையெய்திவிட்டார்.
கடந்த ஆறு தசாப்தங்களாகத் தமிழ்நாடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து அரசியல் பணியாற்றிய அவர் ஐந்து தடவைகள் தமிழ் நாட்டின் முதலமைச்சராகவும், தொடர்ச்சியாக 13 தடவைகள் தமிழ் நாட்டுச் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டியவராகவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய வழியில் கழகத்தின் அரசியல் பணியை ஆற்றியதோடு மட்டுமல்ல, செம்மொழியாகிய தமிழின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் சிறப்பான பணிகளைச் செய்தவராகவும், சிறந்த தமிழறிஞர், இலக்கிய அறிஞர், கதாசாரியர், நாடகாசிரயர், எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், உயர்வான தலைமைப் பண்புகள் கொண்டவர், அரசியல் ஞானி போன்ற பன்முக ஆளுமை கொண்டவராக அவர் திகழ்ந்தார். இந்திய உப கண்டத்தின் அரசியலிலும் மிகவும் செல்வாக்குமிக்க தலைவராகவும் அவர் மதிக்கப்பட்டார். இத்தகைய உன்னத தலைவரின் சாதனைகளை இச்சிறிய அனுதாபச் செய்தியுள் அடக்கிவிட முடியாது.
கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் எனக்கும் மிக நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புகளும் உறவுகளும் இருந்து வந்தன. நான் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்திலும், அதன் பின்பும் அவர் எனக்குப் பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் வழங்கியதோடு அவர் இறக்கும் வரை எமது அன்பான தொடர்புகளும் உரையாடல்களும் தொடர்ந்தன. தமிழ் தலைவர் தந்தை செல்வநாயகம், தலைவர் அமிர்தலிங்கம் உட்பட பல இலங்கைத் தமிழ் தலைவர்கள் தமிழ்நாட்டில் சீவித்த காலத்திலும் அதற்கு முன்பும் பின்பும் அவரின் அன்பும், எமக்கான ஒத்துழைப்பும் அதிகமாக இருந்ததோடு, அரசியல் ரீதியிலும் எமக்கு பல்வேறு வகையில் உதவியாக இருந்தார். அவரின் பிரிவு என் மனதில் ஆழ்ந்த கவலையைத் தருவதாக உணர்கின்றேன்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளிலும் அவர் மிகுந்த ஈடுபாடு காட்டினார். கலவர காலங்களில் தமிழ் மக்கள் அடைந்த துயரங்கள், வேதனைகளில் தனது கரிசனையை காண்பித்து இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயற்பட்டார்.
அவரின் பிரிவால் இலங்கைத் தமிழ் மக்களும் ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளனர் என்பதை தெரிவிப்பதோடு அம்மக்கள் சார்பிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பிலும், எனது சார்பிலும் எனது ஆழ்ந்த கவலைகளையும் அனுதாபங்களையும் மறைந்த தலைவரின் குடும்ப உறவினர்களுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் தெரிவிப்பதோடு உலகத் தமிழர்களின் உதய சூரியனாக இருந்து ஒளியூட்டிய அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.