இலங்கையில் இயற்கை எரிவாயு மின்உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு உதவி வழங்க தயாராக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
எனினும் நிலக்கரியில் இருந்து இயற்கை எரிவாயுவிற்கு மாறும் போதுள்ள மறைமுகமான பாதிப்புக்கள் குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
அடுத்த மாதமளவில் இலங்கையில் அல்லது இந்தியாவில் நடைபெறும் கூட்டு நடவடிக்கை குழுவின் சந்திப்பில் இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் சூழலியல் காரணங்களை அடிப்படையாக கொண்டு சம்பூரில் அனல் மின்நிலையத்தை அமைக்கும் திட்டமில்லை எனவும் அரசாங்கம் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இலங்கையின் ஒருதலைபட்சமான இந்த தீர்மானம் குறித்து இந்தியா அதிருப்தி அடைந்த போதிலும், இயற்கை எரிவாயு மின்உற்பத்தி திட்டத்தை உதவத் தயார் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நடவடிக்கை இலங்கைக்கு எந்த அளவிற்கு பொருத்தமானது என்ற கேள்வியும் உள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.