சிலாபம் கடல் மார்க்கமாக படகுகளில் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சித்த போது கைதுசெய்யப்பட்ட 21 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சிலாபத்திலிருந்து 117 கடல் மைல் தூரத்தில் வைத்து இவர்களை கைதுசெய்த கடற்படையினர் மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பில் கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை கடற்பரப்புக்குள் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் நோக்கத்தில் இலங்கை கடற்படையின் மேற்கு பிரிவில் பாதுகாப்பு கடமையில் இருந்தவர்களால் கடந்த 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்தின் பேரில் இலங்கையர்கள் 21 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கடற்படையினர் இலங்கைக்கு உரித்தான பொருளாதார வலயத்துக்குள் பாதுகாப்பு கடமையில் இருந்த வேளை, சந்தேகமான முறையில் தெற்கு கடற்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த டோலர் படகு மற்றும் 21பேரை கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
சிலாபத்திலிருந்து சுமார் 117 கடல் மைல் தூரத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் டோலர் படகொன்று பயணிப்பதை கடற்படையினர் கண்காணித்துள்ளனர். இதன்போது குறித்த படகு பயணிக்கும் திசைக்கு கடற்படையின் எதிர்த்தாக்குதல் நடத்தக்கூடிய 2 படகுகள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக குடியேறுவதற்கு முயற்சித்தபோதே 21இவரகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 19 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் கைதுசெய்யப்பட்ட இவர்களை இன்று சிலாபம் பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.