தனிப்பட்ட அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதை விடுத்து, நாட்டின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க, அரசியல்வாதிகள் செயற்பட வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்காக, சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்டுள்ள, நாடாளுமன்றக் குழுவின் முதலாவது பிராந்திய மாநாடு, கண்டி, மஹாவலி ரீச் ஹோட்டலில் நேற்று (06) நடைபெற்றது.
அங்கு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தங்களுக்கு வழங்குமாறு, ஒன்றிணைந்த எதிரணியினர் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
நாடு பிரிவதை, தாம் எப்போதும் விரும்பவில்லை என்று கூறிய அவர், தாங்கள், எப்போதும் தேசிய அரசியலுடன் இணைந்தே இருந்துள்ளோம் என்றும் அதேபோன்று, தமிழ் மக்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நாட்டை, சரியான பாதையில் வழி நடத்த வேண்டுமானால், சகல அமைப்பும் சகல தரப்புகளும், சுயாதீனமாக இயங்க வேண்டும் என்றும் அதேநேரம், நாம் பிரிவினையை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்த அவர் ஆரம்ப காலத்தில், சோல்பரி ஆணைக்குழு, டொனமூர் ஆணைக்குழு போன்றன, சமஷ்டி முறையை வழங்க முன்வந்த போதும், அன்றைய சமூகம் அதை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.