வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் உள்ளிட்ட அமைச்சர்கள் மூவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முடிவெடுத்தது. இதையடுத்து நாளைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் பா.டெனீஸ்வரன். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு புதிய அமைச்சரவை ஒன்றை நியமித்தார். இதையடுத்து தன்னை அமைச்சரவையில் இருந்து நீக்கியமை சட்டப்படி செல்லாது எனவும் தானே தொடர்ந்தும் சட்டப்படியான அமைச்சர் என உத்தரவிடக்கோரியும் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார் டெனீஸ்வரன்.
இந்த வழக்கை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு வழக்காளி கோரியபடி அவர் தொடர்ந்தும் அமைச்சராகப் பதவி வகிக்கிறார் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. டெனீஸ்வரன் வகித்த அத்தனை அமைச்சுக்களுக்கும் டெனீஸ்வரனே தொடர்ந்தும் அமைச்சராவார் என மன்று கட்டளையிட்டது.
ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும்கூட டெனீஸ்வரன் தனது அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எவையும் வடக்கு மாகாண சபையினால் எடுக்கப்படவில்லை.
இந்த விடயத்தில் தனக்கு அமைச்சர்களை நியமிக்கவோ விலக்கவோ உரிமை இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துவிட்டதால் தான் டெனீஸ்வரனை அமைச்சராக நியமிக்கவோ ஏற்கனவே உள்ள அமைச்சர்களில் ஒருவரை விலக்கவோ நடவடிக்கை எடுக்க முடியாது என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
அத்தோடு டெனீஸ்வரன் விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநரே தவறிழைத்தார் என்றும் அவரே இந்தப் பிரச்சினையைச் சரிசெய்யவேண்டும் என்றும் முதலமைச்சர் கூறி வருகின்றார்.
ஆளுநரோ, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அமைச்சரவையை அறிவிப்பதற்கு ஏதுவாக அமைச்சர்களின் பெயர்களைப் பரிந்துரைக்குமாறு முதலமைச்சரிடம் கேட்டபோதும் அவர் அதனைச் செய்யாததன் காரணமாகவே இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்று கூறி வருகின்றார்.
இப்படி இரு தரப்பினரும் மாறி மாறிப் பந்தைத் தள்ளிவரும் நிலையில் நீதிமன்ற உத்தரவை அலட்சியப்படுத்தி அவமரியாதை செய்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கும் வழக்கை டெனீஸ்வரன் முதலமைச்சருக்கு எதிராகவும் தனது அமைச்சுப் பொறுப்புக்களைக் கைவசம் வைத்திருக்கும் இரு அமைச்சர்களுக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்திருக்கிறார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்களான சிவநேசன், அனந்தி ஆகியோர் மீதே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் டெனீஸ்வரனின் அமைச்சுப் பதிவி தொடர்பில் இடம்பெறும் வழக்கு நாளையதினம் மன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதால் அன்றைய தினமே நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.