அமெரிக்காவில் கருப்பின சிறுவன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்தவர்களை வெள்ளை இன போலீசார் சுட்டுக்கொல்லக்கூடிய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
இந்த நிலையில் ஓஹியோ மாகாணத்தில் கருப்பினத்தை சேர்ந்த 13 வயது சிறுவனை வெள்ளை இன போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓஹியோ மாகாணத்தின் தலைநகரான கொலம்பசில் ஒரு நபரிடம் ஆயுதங்களை காட்டி 10 டாலரை (சுமார் ரூ.650) பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வந்தனர். அந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பேரை ஒரு இடத்தில் பார்த்ததும் போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர்.
ஆனால் போலீசாரை பார்த்ததும் அவர்களில் 2 பேர் தப்பி ஓடினர். போலீசாரில் ஒரு சிலர் தப்பி ஓடியவர்களை விரட்டி சென்றனர். மற்ற போலீசார் அங்கு தப்பி ஓடமால் நின்று கொண்டிருந்த டயர் கிங் (வயது 13) என்ற சிறுவனை கைது செய்தனர். அப்போது அந்த சிறுவன் தனது இடுப்பில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்தான். இதை பார்த்த போலீசார் சற்றும் யோசிக்காமல் அந்த சிறுவனை சரமாரியாக சுட்டனர். இதில் சிறுவன் ரத்த வெள்ளத்தில் சரிந்தான்.
அதன் பின்னர் தான் அந்த சிறுவன் வைத்திருந்தது உண்மையான துப்பாக்கி இல்லை என்பதும், அது வெறும் விளையாட்டு துப்பாக்கி என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அங்கு கருப்பின மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.