தமிழக அரசு சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியிருக்க கூடாது என்று திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
சசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழக தலைவருமான திவாகரன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் மற்றும் புதுவை நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களில் வெற்றிபெறுவோம் என தினகரன் கூறியிருப்பது அரசியல் வியாபாரத்திற்காகவே. திண்டுக்கல் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து மன்னார்குடி கூட்டத்துக்கு, டோக்கன் கொடுத்து ஆட்களை வரவழைத்திருக்கிறார்கள்.
இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு குக்கர் கொடுக்கப்படுவதாக சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என அவர் கூறியிருப்பது அரசியல் பேரத்திற்கு வழி. ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி என்பது தனிக்கதை அதைப்பற்றி விரைவில் தெரிவிப்பேன்.
ஆறுமுகசாமி கமிஷனில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கும், ஜெயலலிதாவின் மரணத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
பொதுப்பணித்துறையில் பாசனப்பிரிவு செயல்படுகிறதா என தெரியவில்லை. ஆறுகளில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் வீணாகிக்கொண்டிருக்கிறது. கடைமடை பகுதிக்கும் தண்ணீர் சென்றடையவில்லை. தமிழக அரசு உள்ளாட்சித்தேர்தலை நடத்த விரும்பவில்லை. இதனால் மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு நிதி வரவில்லை. பொதுமக்களை பாதிக்கக்கூடிய வகையில் சொத்துவரியை உயர்த்தியிருக்கிறார்கள்.
தமிழக அரசு தற்போது பல்வேறு சிக்கலில் மாட்டி தவிக்கிறது.
சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியிருக்க கூடாது. ஏன் அவ்வாறு செய்தார்கள் என்பது தெரியவில்லை. அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் சந்தேகத்தை கிளப்பிக்கொண்டே இருக்கிறது. வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றினாலும் சிலை கடத்தல் வழக்குகள் மற்றும் சாமி சிலைகள் செய்ததில் மோசடி தொடர்பாக இந்த அரசாங்கத்தில் உள்ளவர்களும், அதிகாரிகளும் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
பல கோடி ரூபாய் கொடுத்து துணைவேந்தர்கள் பதவிக்கு வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஊழல் இருக்கிறது.
எந்த தேர்தலிலும் போட்டியிட விரும்பவில்லை. கட்சியை வளர்க்கவேண்டும், பணத்தின் பரிபாலனத்தை படிப்படியாக குறைக்கவேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.