ரூ.500 கோடி முறைகேடு- விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

267 0

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவுசெய்வதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் முக்கியமான கோவில்கள் பட்டியலில் சுமார் 4 ஆயிரம் கோவில்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில், ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனியாக ஆன்லைன் மூலம் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு பணம் கட்டி முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப் பட்டது.

அதாவது, இ-பூஜா, இ-அன்னதானம், இ-ரூம் என்று பல்வேறு வசதிகள் கொண்டுவரப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. சுமார் 10 நிறுவனங்கள் இந்த பணிகளை ஒப்பந்தம் மூலம் எடுத்து நடத்தின. ஆன்லைன் மூலம் வசூலாகும் பணத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்து சமய அறநிலையத்துறைக்கு செலுத்தி வந்தன.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் குறைந்ததாக தெரிகிறது. அதாவது, வசூலாகும் பணத்தை அரசுக்கு முறையாக செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த நான்கைந்து மாதங்களாக முறையாக கணக்குகளையும் தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் ஜெயா விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையே, தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தமும் கடந்த ஜூன் மாதம் முடிவடைந்தது. இதனால், விசாரணையும் துரிதப்படுத்தப்பட்டது. இந்த விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது, பழனி கோவிலில் ஆன்லைன் மூலம் பணம் வசூல் செய்யும் ‘ஸ்கை’ என்ற தனியார் நிறுவனம் ரூ.25 கோடி வரை அறநிலையத் துறைக்கு பணம் செலுத்தவில்லை என்பது தெரியவந்தது. இதேபோல், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோவில்களில் இருந்தும் கடந்த 4 ஆண்டுகளாக கோடிக்கணக்கான பணம் அரசுக்கு வழங்கப்படாமல் இருப்பது தெரியவந்தது.

இந்த முறைகேடுகளில் அறநிலையத்துறை ஊழியர்களும் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, தனியார் நிறுவன அதிகாரிகளிடமும், அறநிலையத் துறை ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.500 கோடி வரை முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வரும் என்று தெரிகிறது. இதனால், அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் அச்சத்தில் உள்ளனர்.

Leave a comment