போலீஸார் பைக்கை மடக்கியதால் சென்னை அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தேடி வருகிறார்கள். இதனால் அடையாறு பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அருணாச்சலபுரத்தைச் சேர்ந்தவர் குட்டி என்கிற ராதாகிருஷ்ணன். 24 வயதான இவர் பி.காம் படித்துள்ளார். இந்நிலையில் அடையாறு அருகே உள்ள ராஜாமுத்தையாபுரத்தில் நடந்த கோயில் திருவிழாவுக்கு சென்றவர் இரவு 10.30 மணியளவில் பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அவருடன் அவரது நண்பர் சுரேஸும் உடனிருந்துள்ளார். ராதாகிருஷ்னண் பைக் ஓட்டி வரும்போது அடையாறு மலர் ஆஸ்பத்திரி அருகே உள்ள திருவிக பாலத்தில் அவரை போலீஸார் மடக்கியுள்ளனர். அப்போது லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்குமாறு போலீஸார் கூறியுள்ளனர். ஆனால் ராதாகிருஷ்னண் லைசென்ஸ் இல்லை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து அவரது வாகனத்தில் இருந்து சாவியை போலீஸார் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதன்பின்னர் சாவியை கொடுக்குமாறு போலீஸாரிடம் ராதாகிருஷ்னண் கேட்க அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர். இதனால் சாலையின் ஓரத்தில் நின்றுள்ளார். “ஏன் சாலையின் ஓரத்தில் நிற்கிறாய்” என போலீஸார் கேட்க, அதற்கு “சாவியை கொடுக்கவில்லை என்றால் ஆற்றில் குதித்துவிடுவேன்” என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதைக்கேட்ட போலீஸார் “நீ அவ்வளவு பெரிய ஆளா, குதித்து காமி” என சொன்ன உடனே ராதாகிருஷ்ணன் ஆற்றில் குதித்துள்ளார். இதனால் பதற்றம் அடைந்த போலீஸார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர்.
`ஆனால் மழை பெய்து வருவதால் தற்போது மீட்பு பணிகளை செய்யமுடியாது” எனக் கூறி தீயணைப்புத்துறையினர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகியும் அவர் கிடைக்கவில்லை. உடனடியாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆனால் அவர்களுக்கு போலீஸ் எந்த ரெஸ்பான்ஸும் கொடுக்கவில்லை என அவரது தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ராதாகிருஷ்ணனுடன் வந்த அவரது நண்பர் சுரேஸை அழைத்துச் சென்ற போலீஸார் ஜெ-2 அடையாறு காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். இதேபோல் ராதாகிருஷ்ணனின் சகோதரர் நித்தியானந்தாவையும் போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையே காணாமல் போன ராதாகிருஷ்ணனை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு கடந்தும் மீட்பு பணிகள் தொடங்காததால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.