தேனி அருகே வீட்டில் குழந்தை பெற்றெடுத்த பெண் தனது குழந்தையுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஆங்கில மருத்துவம் பார்க்க வேண்டாம் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர்.
தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி தென்றல் நகரை சேர்ந்த தனுஷ்கோடி மகன் கண்ணன் (வயது 29). என்ஜினீயர். இவருடைய மனைவி மகாலட்சுமி (25). இவர் எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகாலட்சுமிக்கு கடந்த 2-ந்தேதி வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆனது. அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அவருடைய கணவரே அவருக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால், தொப்புள் கொடியில் இருந்து நச்சுக்கொடியை அகற்றாமல் அவர்கள் இருந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மருத்துவ குழுவினர் நேற்றுமுன்தினம் அவருடைய வீட்டுக்கு சென்று நச்சுக்கொடியை அகற்ற வேண்டும் என்றும், தாய், சேய் நலன் கருதி மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினர். ஆனால், அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இயற்கையாக நடந்த சுகப்பிரசவத்தில் தாய், சேய் ஆரோக்கியமாக இருப்பதாக கூறினர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சித்த மருத்துவர்களும் வந்து அந்த தம்பதிக்கு ஆலோசனை வழங்கினர். அதன்பிறகு நச்சுக்கொடி அகற்றப்பட்டது.
இந்தநிலையில், பிறந்த குழந்தையின் உடல்நிலையை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது குறித்து குழந்தையின் பெற்றோருக்கு மருத்துவ குழுவினர் ஆலோசனைகள் வழங்கினர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
அதன்பேரில் நேற்று காலையில் ஆம்புலன்ஸ் மூலம் மகாலட்சுமியும், அவருடைய குழந்தையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவருடைய கணவர் கண்ணனும் உடன் இருந்தார். மகாலட்சுமி மற்றும் அவருடைய குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
அப்போது பரிசோதனைக்கு உடன்படுவதாகவும், தங்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்க்கக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. தொடர்ந்து மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் தாயும், குழந்தையும் உள்ளனர்.