காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி (வயது 94) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியு வார்டில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் நேரில் வந்து விசாரித்துவருகின்றனர்.
அவ்வாறு கருணாநிதியின் உடல் நலம் குறித்து நேரில் விசாரிக்க வரும் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமாத்துறையை சார்ந்த பல்வேறு நபர்களுக்கும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, மு.க.தமிழரசு, கனிமொழி எம்.பி. உள்பட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், காவேரி மருத்துவமனியில் இருந்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் கருணாநிதி வீடு திரும்புவார் என திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறுகையில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தற்போது கலைஞரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாம் சொல்ல வருவதை அவரால் கேட்க முடிகிறது. ஆபத்தான காலகட்டத்தை கடந்து அவரது உடல் நிலை முன்னேறி வருகிறது. மருத்துவமனையில் இருந்து இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கலைஞர் வீடு திரும்புவார் என தெரிவித்தார்.