மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை முடிந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பனாமா ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக பாதிப்பும், அதை தொடர்ந்து நெஞ்சு வலியும் ஏற்பட்டது.
இதனால் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் அறிவியல் மருத்துவ நிறுவன மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையை தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக நவாஸ் ஷெரிப்பிற்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் அறிவித்தனர்
எனவே,, மருத்துவமனையில் இருந்து அவரை மீண்டும் சிறைக்கு மாற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். இந்த தகவலை சிறையில் இருந்த நவாஸ் ஷெரிப்பின் மகள் மற்றும் மருமகனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால், முதலில் சிறைக்கு செல்ல விரும்பாத நவாஸ் ஷெரிப் அவரது மகள் மற்றும் மருமகனின் அலோசனைக்கு பிறகு மீண்டும் சிறைக்கு செல்ல சம்மதம் தெரிவித்தார்
இதைத்தொடர்ந்து, 11 பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மருத்துவமனையில் இருந்து நவாஸ் ஷெரிப் அடியாலா சிறைக்கு மாற்றப்பட்டார்.
அடுத்த சில தினங்களில், அல்ட்ராசவுண்ட் மற்றும் இதயம் தொடர்பான மேலும் சில பரிசோதனைகள் செய்துகொள்ள நவாஸ் ஷெரிப்பிற்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.