காவேரி நதிநீரைப் பெறுவது தமிழக மக்களின் அடிப்படை உரிமை – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

386 0

தமிழக மக்களின் அடிப்படை உரிமையான காவிரி நதிநீரை நீதிமன்ற உத்தரவுக்கமைய திறந்து விடுமாறு மத்திய அரசு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களுக்கு சொந்தமான சொத்துகளையும், மக்களையும் கர்நாடக இன வெறியர்கள் தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள், இதனால் தமிழர்களின் பெருமளவிலான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதுடன் தமிழர்கள் பலரும் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள், காணொளிகளிலும், செய்திகளிலும் இந்தக் காட்சிகளைப் பார்த்த புலம்பெயர் ஈழத் தமிழர்களாகிய நாம் மிகுந்த மனவருத்தத்துக்கு உள்ளாகி இருக்கிறோம். கர்நாடகாவில் தாக்குதலில் ஈடுபடுவோரை அந்த மாநில அரசு மறைமுகமாக ஊக்குவிக்கின்ற அதே நேரம் தமிழகத்தில் வாழும் கன்னடர்களுக்கோ அவர்களின் சொத்துகளுக்கோ எந்தப் பாதிப்பும் வந்து விடாதவாறு தமிழக அரசு பாதுகாத்து வருகிறது. இது விடையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்திய மத்திய அரசு மௌனமாக வேடிக்கை பார்ப்பது தமிழர்களாகிய எமக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. icet logo

நாம் எந்த ஆயுதத்தை தெரிவு செய்ய வேண்டுமென்பதை எதிரியே தீர்மானிக்கிறான், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கான நீதியும், உரிமையும் புறக்கணிக்கப்படும் போதே தவிர்க்க முடியாத கட்டத்தில் எங்களுக்கான வாழுமுரிமையை வேண்டி ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டி ஏற்பட்டது, இந்நிலமையே தமிழர்கள் பரந்து வாழ்கின்ற தேசங்களெங்கும் தொடருமாயின் அவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தமக்கான இறைமையுள்ள ஒரு தேசத்தை கட்டி எழுப்பப் போவது தவிர்க்க முடியாததாகும்.

காவிரி நதிக்கு கரிகாலன் கல்லணைகட்டியதும், முல்லைப்பெரியாருக்கு பெனிக்குவிக் அணை கட்டியதும் தமிழர்களுக்காகவே தவிர கன்னடர்களுக்காகவோ, மலையாளிகளுக்காகவோ அல்ல, ஆனால் யாரால், யாருக்காக அணைகள் உருவாக்கப்பட்டதோ அவர்களுக்கே அந்த நதிநீரைப் பெறும் உரிமை காலங்காலமாக இன்றுவரை மறுக்கப்படுகிறது. தமிழர்களைத் தமிழர்களே ஆளுவதற்குக்கான காலமின்னும் ஏற்படாமையே இவ்வாறு உலகெங்கும் தமிழினம் கேட்க நாதிஅற்ற இனமாக போனதற்கு காரணமாகும்.

அத்துடன் கர்நாடாகாவில் உள்ள ஒட்டு மொத்த கட்சிகளும், பேதத்தை மறந்து கன்னடர்களாக இணைத்து தமிழர்களாகிய எம்முரிமையை மறுத்து தாக்குதல் நடத்துவதற்கு எதிராக தமிழர்களாகிய நாமும் கட்சி, அமைப்பு பேதங்களை விடுத்து தமிழ்த் தேசிய இனமென்கின்ற ஒரே குடையில் நின்று எமக்கெதிராக மேற்கொள்ளப்படும் சதிகளை முறியடிக்க ஓரணியில் திரளுமாறு ஈழத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழ்கின்ற அத்தனை தமிழர்களையும், அமைப்புகளையும் மக்களவையினராகிய நாம் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.