நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு 11ம் திகதிக்கு ஒத்தி வைப்பு

328 0

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலங்களில் இரண்டு பொய்யானது என்று வழக்கின் பிரதான சாட்சியாளரான ரொஹான் அபய ஈரியகொல்ல நீதிமன்றில் தெரிவித்துள்ளார். 

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

நாமல் ராஜபக்ஷ தரப்பு சட்டத்தரணியின் குறுக்கு விசாரணையின் போது, முன்னதாக இரகசியப் பொலிஸாருக்கு வழங்கிய 05 வாக்குமூலங்களில் இரண்டு பொய்யானது என்று சாட்சியாளர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

முன்னதாக வழக்கின் பிரதிவாதியால் 36 மில்லியன் ரூபாவுக்கான காசோலை தனக்கு வழங்கப்பட்டதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்கியுள்ள சாட்சியாளர், நீதிமன்றில் சாட்சியமளிக்கும் போதே 30 மில்லியன் ரூபாவுக்கான காசோலையே வழங்கப்பட்டதாக சாட்சியமளித்துள்ளார்.

இவை ஒன்றுக்கொன்று முரணானதில்லையா என்ற நாமல் ராஜபக்ஷ தரப்பு சட்டத்தரணியின் விசாரணைக்கு பதிலளிக்கும் போதே சாட்சியாளர் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதன்படி வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் 11ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்தமை ஊடாக நிதி மோசடி சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment