நியூசிலாந்தில் உயர் கல்வி – போலி ஆவணங்களை சமர்பித்துள்ள இலங்கை மாணவர்கள்

328 0

உயர் கல்விக்காக தங்களது நாட்டிற்கு வருகை தருவதற்கு இலங்கை மாணவர்கள் போலி விபரங்கள் உள்ளடங்கிய விண்ணப்பங்களை சமர்பித்துள்ளதாக நியூசிலாந்தின் குடிவரவுத்துறை காரியாலயம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் மும்பை நகரில் உள்ள நியூசிலாந்தின் குடிவரவுத்துறை காரியாலயத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இலங்கையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தின் ஊடாக போலியான தகவல்களை வழங்கி நியூசிலாந்தில் உயர் கல்விக்கான வீசாவை விண்ணப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2018 ஆம் ஜனவரி மாதம் இந்த விடயம் தெரியவந்த சந்தர்ப்பத்தில் இலங்கை மாணவர்களினால் 88 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்ததாகவும் அவற்றில் 83 விண்ணப்பங்கள் போலியனவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இவ்வாறு போலியான தகவல்களை வழங்கி சமர்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் உயர் கல்விக்காக விண்ணப்பிக்கும் போது மாணவன் ஒருவனின் வங்கிக் கணக்கில் குறைந்த பட்சம் 15,000 அமெரிக்க டொலர்கள் இருக்க வேண்டும்.

இருப்பினும் குறித்த மாணவர்கள் நிதி நிறுவனம் ஒன்றின் மூலம் போலியான வங்கிக் கணக்குகளை தயாரித்து விண்ணப்பங்களை சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தற்போது நியூசிலாந்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை எனவும், எதிர்காலத்தில் வீசா விண்ணப்பிப்பவர்கள் தொடர்பில் கடுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் நியூசிலாந்தின் குடிவரவுத்துறை அமைச்சர் இயன் லீஸ் கலோவேய் தெரிவித்துள்ளார்.

Leave a comment