பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களின் திரைமறைவில் வேறு குழு- விஜேதாச

265 0

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்காக பணத்தை செலவுசெய்வதற்கு வேறு குழுவினர் திரைமறைவில் உள்ளார்கள் எனவும்,  இவர்களைப் பற்றி அறிந்துகொள்ளாத அப்பாவி மாணவர்கள் வீணாக தமது வாழ்க்கையை பாழாக்கிக் கொள்வதாகவும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

உயர்கல்வி அமைச்சுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் வெளியே அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் பாதாள உலகக் குழுவினரைப் போல அடித்து உடைத்துக் கொண்டுவந்து பேச்சுவார்த்தைக்கு வா என அழைத்தால் அவர்களுடன் பேச நாம் தயாராகவில்லை.

இதுவரை எந்தவொரு மாணவக் குழுவும் எம்மை நாடி பேச்சுவார்த்தையொன்றுக்கு நேரம் ஒதுக்குமாறு கோரவில்லை. எழுத்து மூலேமோ அல்லது தொலைபேசி மூலமோ எந்தவொரு கோரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சப்ரகமுவவிலிருந்து போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களிடம் தகவல்களைப் பெற முடிந்தது. அதற்கமைய ஆறு பஸ்களில் மாணவர்கள் கொழும்புக்கு ஆர்ப்பாட்டத்துக்காக அழைத்துவரப்பட்டுள்ளனர்.

நாள் ஒன்றுக்கு மூன்று இலட்சம் ரூபா செலவாகியுள்ளது. ஏழு தடைவகள் மாணவர்கள் அவ்வாறு வந்து சென்றுள்ளனர். அதற்காக 2.1 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. மஹாபொல செலவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து கிடைக்கின்றது என்பது தெளிவான ஒரு விடயம் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a comment