பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முத்தாஹிதா மஜ்லிஸ் அமல் வேட்பாளர்கள் 12 இடங்களிலும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (காயிதே ஆஸம் பிரிவு), பலூசிஸ்தான் தேசிய கட்சி, பாகிஸ்தான் முத்தாஹிதா குவாமி இயக்கம், பலூசிஸ்தான் அவாமி கட்சி, அவாமி தேசிய கட்சி, அவாமி முஸ்லிம் லீக், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சானியத் மற்றும் ஜம்ஹூரி வட்டான் ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களில் வென்றுள்ளனர். ஆக உதிரி கட்சிகளிடம் தற்போது 20 எம்.பி.க்கள் உள்ளனர். இதுதவிர 14 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 137 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இந்த தேர்தலில் போதிய பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறவில்லை. 116 உறுப்பினர்களுடன் அதிக இடங்களை பெற்ற கட்சி என்ற வகையில் கூட்டணி அரசு அமைக்க இம்ரான் கான் கடந்த இருநாட்களாக சில தலைவர்கள் மற்றும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.பி.க்களுடன் மும்முரமாக பேசி வருகிறார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்று கொள்வார் என பாகிஸ்தான் வானொலி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கைபர் பக்துங்க்வா மாகாண முதல் மந்திரியின் பெயரை இன்னும் 48 மணி நேரத்துக்குள் இம்ரான் கான் அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.