உண்மையை கண்டறியும் ஆணைக்குழு, இழப்பீட்டிற்கான அலுவலகம் மற்றும் நீதிப்பொறிமுறை தொடர்பில் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் இலங்கை முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் செயலணி, அதன் அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் இந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும் என உயர்மட்ட இராஜதந்திரியொருவரை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்மொழிவுகள் குறித்து 11 பேரடங்கிய செயலணி பரந்த அளவான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக ஜெனிவாவில் தற்போதும் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் ஐ.நாவிற்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்ஹ கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் அரசாங்கமும் அரச நிறுவனங்களும் மிகவும் நெருக்கமாக பணியாற்றிவருகின்ற அதேவேளை ஐக்கிய நாடுகள் சபை, ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய சர்வதேச நிபுணர்களுடனும் கலந்துரையாடப்பட்டுவருவதாக அவர் கூறியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் பதில் அளிக்கும் போதே இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தீர்மானத்தின் பிரகாரம் தமிழீழ விடுதலை புலிகளுடன் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்ததின் போது இருதரப்பாலும் இழைக்கப்பட்டதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அத்துடன் இறுதிகட்ட யுத்தத்தில் 40 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் அநேகமானவர்கள் பொதுமக்கள் எனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்திருந்தது.
கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த காணாமல்போதல் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் குழு செய்திருந்த பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ரவிநாத் ஆரியசிங்ஹ இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.