நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை ஓல்டன் தோட்டத்திலிருந்து நிலாவத்தை பிரிவுக்கு செல்லும் சுமார் 08 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பிரதான பாதையை புனரமைக்க கோரி குறித்த தோட்ட மக்கள் இன்று காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
நிலாவத்தை தோட்டத்தில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பதாதைகளை ஏந்தி, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
பல வருடகாலமாக புனரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் பாதை பாதைகுன்றும் குழியுமாக காணபடுகின்றது. இப்பாதையினை 100 இற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பாதை சீர்கேட்டினால் இத்தோட்ட மக்கள் கால் நடையாக நகரத்திற்கு செல்வதோடு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாகன வசதிகள் இல்லாமல் தலையில் சுமந்து செல்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இத்தோட்டத்தில் இருந்து செல்லும் பிரதான வீதியில் நீர் ஓடை உள்ளதால் மழைக்காலங்களில் நீர் ஓடையை கடக்கமுடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை பாடசாலை மாணவர்கள் இப்பகுதியை கடக்கும் போது தங்களின் பாதணிகளை கழட்டிக்கொண்டு செல்லும் அவலநிலை பல வருடங்களாக இடம்பெறுவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தோட்டத்தில் உள்ள நோயாளர்கள் மற்றும் தாய்மார்கள் வைத்தியசாலைக்கு செல்வதாக இருந்தால் வாகன வசதிகள் இன்றி நடந்துச்செல்லவேண்டும். நடந்துச்செல்லமுடியாத நோயாளர்களை பொதுமக்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு சுமந்து செல்லும் சூழ்நிலையில் இம்மக்கள் வாழ்கின்றனர்.இப்பாதையினை புனரமைத்து தருமாறு பல அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் கோரியபோதிலும் இதுவரை எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.