தமிழ் மக்கள் நீண்ட காலமாக கோரிவரும் முறையான அரசியல் தீர்வை புதிய அரசியல் சாசனம் கொண்டிருக்கவில்லையாயின் அதனை நாம் நிராகரிப்போம். ஆதரவு கொடுக்கவும் மாட்டோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் எதிர்க்
கட்சித் தலைவரை அவரின் திருகோணமலை இல்லத்தில் சந்தித்து இன்றைய அரசியலும் பெண்
களின் பங்களிப்பும் என்ற கருப்பொருளில் அவருடன் கலந்துரையாடியபோதே அவர் மேற்கொண்
டவாறு கூறினார்.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த நல்லாட்சிக்கான பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அரசியல் ஆர்வளர்களும் கலந்துகொண்டு தமது பிரதேச வாழ் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகள்
தொடர்பாக கலந்துரையாடினார்கள்.
சம்பந்தன் கலந்துரையாடலின் போது மேலும் கூறியதாவது,
தமிழ் மக்கள் இந்நாட்டின் ஆட்சிக்கு உட்பட்டவர்களாக தொடர்ந்தும் இருக்க வேண்டுமாயின் அவர்கள் எதிர்பார்க்கும் முறையான அரசியல் தீர்வொன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். அதையே தமிழ் மக்கள் அவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் எதிர்
பார்க்கும் அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லையாயின் அரசியல் அமைப்பு சட்டவரைபு முறையில் அரசாங்கம் தவறு விடுமாக இருந்தால் இதில் எமது எதிர்பார்க்கைகள் நிறைவேறாமல் இருக்குமாக இருந்தால் நாம் மீண்டும் ஆயுதம் எடுக்க மாட்டோம். ஆனால் எம்மை ஆளமுடியாத நிலையை ஏற்படுத்துவோம்.
நான் அண்மையில் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்து உரையாடிய போது
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் சில விடயங்களை எடுத்துக் கூறியிருந்தேன்.
புதிய அரசியல் சாசன ஆக்கத்தில் நாம் முக்கியமான பங்களிப்பை செய்து வருகின்றோம்.
எங்களுடைய எதிர்பார்ப்பு இம்முறை உருவாக்கப்படும் அரசியல் சாசனத்தின் மூலம் தமிழ்
மக்களுடைய நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்பதாகும். இதுவரை இந்த நாட்டில் உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசியல் சாசனமும் தமிழ் மக்களுடைய ஆதரவுடனோ சம்மதத்துடனோ கொண்டுவரப்படவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தின் அடிப்படையில் ஒரு மக்கள் கூட்டத்தின் சம்மதமில்லாமல் எந்த அரசும் ஆட்சி செய்ய முடியாது. ஆட்சியென்பதன் அத்திவாரம் மக்களுடைய சம்மதமாகும். மேற்படி பிரகடனத்தில் இவ்விடயம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மக்களை ஆளும்போது அவர்களின் சம்மதத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
நாட்டில் நடாத்தப்படுகின்ற ஜனநாயக தேர்தல்களில் நியாயமான வாக்கெடுப்பின் மூலமாக
மக்களால் ஆணை தருகின்ற ஜனநாயக முடிவுகளின் அடிப்படையில் தான் ஆட்சி அமைய வேண்டும். இதுதான் ஆட்சியியலின் அத்திவாரம்.
நடைமுறையிலுள்ள அரசியல் சாசனத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்கள் தமது சம்மதத்தை அந்த அரசியல் சாசனத்துக்கு வழங்கவில்லை. எனவே எம்மை அச்சாசனத்தின் மூலம் ஆளமுடியாது. நாங்கள் எதிர்பார்க்கும் விடயம் தற்பொழுது உருவாக்கப்படும் அரசியல் சாசனத்துக்கு தமிழ்
மக்களுடைய சம்மதமும் பெறப்படவேண்டும். இதன் முழுமையான அர்த்தம் என்னவென்றால் வரையப்படும் சாசனத்தில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து உரிமைகளும் வழங்கப்படும். வழங்கப்படுவதனூடாக மேற்படி அரசியல் சாசனத்துக்கு நியாயபூர்வமான ஆதரவு கிடைக்குமென எதிர்பாக்கலாம்.
ஐ.நா. சபையின் மனித மற்றும் சிவில் உரிமைகளின் சட்டங்களின் அடிப்படையிலும் ஐ.நா.வின் சமூக பொருளாதார கலாசார உரிமைகளின் அடிப்படையிலும் மக்களுக்கு சுய நிர்ணயவுரிமை இருக்கின்றது. ஐ.நா. சபையின் சிவில் உரிமை சம்பந்தமான விடயங்களை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது. இவை அனைத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மக்கள் குழுவுக்கும் சுயநிர்ணய உரிமை இருக்கிறது.
இதில் வெளியக சுயநிர்ணய உரிமையென்றால் பூரணமான சுதந்திரமாகும். இதை நாம்
கோரவிரல்லை. இதேவேளை உள்ளக சுயநிர்ணய உரிமையென்றால் அதன் கருத்து உள்ளடக்கம் மக்களுக்கான சுயாட்சி. தாம் வாழுகின்ற பிரதேசங்களில் பிராந்தியங்களில் ஏற்படுத்தப்படும் சுயாட்சி தான் உள்ளக சுயநிர்ணய உரிமை. எனவேதான் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வரவேண்டுமென்று நாங்கள் கோருகின்றோம். அதுவந்தால் எமது சம்மதத்தை அரசியல் சாசனம் பெறும். அதற்கு ஆதரவையும் வழங்குவோம்.
உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சுயாட்சி வழங்கப்படுமாயின் அந்த அரசியல் சாசனத்துக்கு ஆதரவு வழங்குவோம். இது வராவிட்டால் தமிழ் மக்களின் சம்மதமில்லாம் அவர்களை நாம்
ஆளமுடியுமா? என்ற முடிவை ஆட்சியாளர்கள் எடுக்க வேண்டி வரும். அதேபோன்று நாமும் பாரிய முடிவை எடுக்க வேண்டும். வரப்போகும் அரசியல் சாசனத்துக்கு தமிழ் மக்களுடைய
ஆதரவு இல்லாமல் இருக்குமாக இருந்தால் அந்த முடிவை நாம் எவ்விதமாக எதிர்நோக்கப் போகின்றோம் என்பதும் முக்கியமான முடிவாக இருக்கும். தமிழ் மக்கள் ஆதரவு தரமுடியாத நிலையொன்று ஏற்படுமாயின் தமிழ் மக்களை ஆட்சி செய்யமுடியாத நிலையொன்றை
இந்நாட்டில் நாங்கள் ஏற்படுத்துவோம். இன்னும் தெளிவாகக் கூறப் போனால் தமிழ் மக்களை ஆட்சி செய்ய முடியாத கட்டாய நிலைமையொன்று ஏற்படும். ஆனால் நிச்சயமாக வன்முறைக்கு நாங்கள் பலியாகமாட்டோம். எமது இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதை அனுமதிக்கப் போவதில்லை. அதேவேளை ஆட்சிக்கு அடிப்பணிந்து போகவும் மாட்டோம்.
எங்களை ஆட்சி செய்ய முடியாத ஒரு நிலைமையே ஏற்படும் என நான் ஐ.நா. சபையின்
செயலாளர் நாயகத்திடம் எடுத்துக் கூறியபோது அவர் அமைதியாக செவிமடுத்தார்.
ஆட்சி செய்து கொண்டிருக்கும் புதிய அரசாங்க காலத்தில் ஏதாவது நடக்குமென்று நாம்
எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு நடைபெறவில்லையாயின் நான் ஏலவே கூறியதே முடிவாக இருக்கும்.
ஆனால் நாம் எமது இலக்கை அடைய வேண்டுமாயின் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாங்களாக எதையும் குழப்பக்கூடாது. நிதானமாக நடந்துகொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் பல்வேறு அதிருப்திகள் காணப்படுகின்றன என்பதை நான் அறிவேன். வடமாகா
ணத்தில் முன்னேற்றங்கள் காணாது என்று கருதுபவர் கூட இருக்கின்றார்கள். இதையே சர்வதேச சமூகமும் கூறுகின்றது. ஆனால் அரசாங்கத்துக்கு சிலவற்றை நிறைவேற்றுவதில் ஒரு சில
பிரச்சினைகள் இருப்பதாக தெரிகிறது. நாங்கள் எல்லாவற்றையும் நிதானமாக முன்னெடுக்க வேண்டும்.
இன்றைய அரசியல் போக்கில் நல்லதொரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இரு பெரும் கட்சிகளும் இணைந்து புதியதொரு அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது நல்லதொரு சகுனம். அவர்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும். தமிழ்
மக்களுக்கு நல்லதொரு அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் விரும்புகின்றார்கள். அது அவர்களுக்கு அவசியமானது. ஏனெனில் நாடு தாங்க முடியாத கடன் சுமையில் இருந்து கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமென்பது அவர்களின் இன்றைய தேவையாக இருக்கிறது.
வெளிநாடுகளின் முதலீட்டுப் பாய்ச்சல் கணிசமான அளவுக்கு தேவைப்படுகிறது. நாட்டினை
அபிவிருத்தி செய்ய, பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க, அந்நிய முதலீடுகளைக் கொண்டுவர வேண்டுமாயின் பாரிய முதலீடுகள் தேவையாகவுள்ளது. இவற்றைக் கொண்டுவரவேண்டு
மாயின் நியாயமான அரசியல் தீர்வை வழங்க வேண்டியது அவர்களுக்கு அவசியமானதாக
வுள்ளது. தீர்வைக் கொண்டுவராவிட்டால் சர்வதேச நாடுகளோ அரசாங்கங்களோ இந்த நாட்டில் முதலீடு செய்ய வரமாட்டார்கள் என்ற உண்மை அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
எனவேதான் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமென்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
மீண்டுமொரு யுத்தத்தை அவர்கள் விரும்பவில்லை. சாத்வீகப் போராட்டத்தைக் கூட
விரும்பாமலிருக்கலாம். இவ்வாறானதொரு சூழ்நிலையில் சர்வதேச சமூகத்தினுடைய
பங்களிப்பும் ஊக்கமும் உயர்ந்தளவில் காணப்படுகிறது. தற்போது உள்ள சூழ்நிலை இதற்கு முன்பு இருக்கவில்லை. கணிசமான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. சர்வதேச சமூகம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆக்கபூர்வமான அக்கறை காட்டி வருகிறது. இதை நாம் பாதுகாக்க வேண்டும். இதை கட்டியெழுப்புவது இலகுவான விடயமாக இருக்கவில்லை. அறிவுபூர்வமாக நாம் நடந்து கொண்ட காரணத்தினால் தான் இன்றைய நிலையை அடைந்திருக்கிறோம் அதை கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.
நாம் எதிர்பார்க்கும் விடயங்கள் கூடிய விரைவில் நடைபெறுமென்பதை நாம் எதிர்பார்க்கலாம். நாங்கள் ஒற்றுமையாகவும் ஒருமித்தும் நிற்போமாக இருந்தால் எங்கள் எதிர்பார்ப்பை அடைய முடியும்.
முறையான அரசியல் தீர்வொன்றை நாம் அடைவோமாக இருந்தால் வட கிழக்கின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் எமது புலம்பெயர்ச் சமூகம் பாரிய பங்களிப்பை செய்வார்கள் என எதிர்பார்க்கலாம். இன்றைய சூழ்நிலையில் அவர்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன. தாம் வழங்கும் நிதியோ உதவியோ தாம் விரும்பிய வண்ணம் எதிர்பார்க்கும் முறையில் செலவு செய்ய சுதந்திரம் இருக்குமா? என்ற சந்தேகங்கள் அவர்கள் மத்தியில் காணப்படலாம். ஆனால் முறையான அரசியல் தீர்வொன்று கொண்டுவரப்படுமாயின் நிலைமைகள் மாற வாய்ப்புண்டு என இரா. சம்பந்தன் தெரிவித்தார்.