தீபமே எங்கள் திலீபமே!

411 0

thileepan_fpதமிழீழ விடியலென்ற
தீராத பசியோடு
தண்ணீரும் அருந்தாது
தியாக வேள்வியிலே
தீபமாய் எரியும் திலீபமே
யாரடா உள்ளனர்
உந்தன் உணர்வையும்
தமிழீழ உயிரொன்றையும்
மறக்கடிக்கச் செய்வதற்கு
யாரடா உள்ளனர்!
நிலம் மீட்கும் துணிவோடு
மண்ணின் மக்களின்று
அகிம்சைப் போர் தொடுத்து
ஆங்காங்கே நகர்கின்றார்!
வேதியலுக்கும் புரியாத
வேங்கையரின் வீரத்தை
வீறுடனே பதியமிட்ட
அகிம்சையின் வேந்தனே
காந்தியைத் தலைகுனிய வைத்த
கிந்தியத்தின் முகத்திரையைக்
கிழித்தெறிந்து முரசறைந்தாய் திலீபமே!
பெரும் புயலாக மேலெழுந்து
திலீபமாய் மூட்டிய தீயின்று
அணைந்து விட்டதாய்
யார் யாரோ சொல்கின்றார்
சிங்கத்தின் கால் கழுவி
யானையின் கை தடவி
அரசியல் பிழைப்புக்காய்
அலைகிறது ஒரு கூட்டம்
அண்ணல் காந்தியின்
பெயர் சொல்லி
அழித்தது இன்னொரு கூட்டம்!
உணர்வை எரிதனலாய்
எம்முள் உரமேற்றிவிட்டு
ஆவி துடிக்க அமைதியானது
உன் உடல் மட்டுமே திலீபமே!
நல்லைநகர் வீதியிலே
காந்தியைக் கொன்றுவிட்டு
நந்திக்கடலருகே
நேதாஜியையும் தின்ற – சீ
வெட்கமற்ற கிந்தியாவே
சின்னஞ் சிறு இனமொன்றைப்
பின்கதவால் நுளைந்து
அழிப்பதற்குத் துணைநின்ற
அயோக்கியத்தனத்தின்
மொத்த உருவமே
ஒருநாள் நீ சிதைவதும்
சிதறுவதும் நிகழ்ந்தேறும்
தமிழினத்தின் சாபம்
உன்னைச் பொசுக்கட்டும்!
அழகான குடிலொன்றை
அமைத்த வேளையிலே
அமைதியென்று அழித்தாய்
அதனையும் கடந்தோம்
அகிலத் திசையெங்கும்
எம் தேச அழகோடு
செயல் நேர்த்தி கண்டு
எம்மோடு கரம் கோர்த்து
நட்புப் பாராட்டி
நாம் மெதுவாக
நிமிரத் துடிக்கையிலே
தடையாக அயலிருந்து
அழிவுதனை விதைத்தாயே!
நீதி தோற்பதில்லை
மக்கள் புரட்சி வெடிக்குமென்ற
மகத்துவ அறைகூவலது
மெல்ல உருப்பெற்று
வல்ல நிலையடைந்து
வரலாற்றில் பதிவாகும்
வடிவெடுத்துப் பாய்ந்து
முரசறையும்
எம் முதுச நிலம் மீளும்
ஒரு நாளினிலே
வானிருந்த உந்தனதும்
உந்தன் தோழரதும்
வாழ்த்தொலி கேட்குமன்றோ!


மா.பாஸ்கரன் , யேர்மனி