ரசியலமைப்பின் 20ஆவது திருத்ததை கொண்டு வந்தால் அதனால் மஹிந்த ராஜபக்ஷவே பயனடைவார்-நளின் பண்டார

1520 0

அரசியலமைப்பின் 20ஆவது திருத்ததை கொண்டு வந்தால் அதனால் மஹிந்த ராஜபக்ஷவே பயனடைவார் ஏனெனில் தற்போதுள்ள ஜனாதிபதி முறைமை இருந்தால் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதியாக முடியாது. ஆனால் 20 ஆவது திருத்ததை கொண்டு வந்தால் நிறைவேற்று பிரதமராக ஆக முடியும்” என சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியது. இக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார மேலும் குறிப்பிடுகையில்,

“முன்னாள் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவினரால் மூன்று மணிநேரம் விசாரணை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்மீதான விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அவருக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அத்துடன் நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த செய்தி தொடர்பாக பாராளுமன்றத்தில் பதிலளிக்காமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தப்பித்து ஓடியிருந்தார். அர்ஜூன மகேந்திரன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டால் மாத்திரமே நியுயோர்க் டைம்ஸ் செய்தி தொடர்பில் பதிலளிப்பேன் என்று முன்னாள் ஜனாதிபதி கூறுவது வேடிக்கையாக உள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரமும் நியுயோர்க் டைம்ஸ் விவகாரமும் வெவ்வேறு விவகாரங்களாகும். அதனை இணைக்க முடியாது. ஆகவே முன்னாள் ஜனாதிபதி தப்பித்து ஒடாமல் பதிலளிக்க வேண்டும்.

அத்துடன் மத்திய வங்கி மோசடியுடன் சம்பந்தப்பட்ட அர்ஜூன அலோசியஸ் இன்னும் சிறையிலேயே உள்ளார். மத்திய வங்கி மோசடிக்கு எதிரான விசாரணைகள் தயவின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே நியுயோர்க் டைம்ஸ் செய்திக்கு பதிலளிக்காமல் இருப்பதற்கு அர்ஜூன மகேந்திரனை முன்னாள் ஜனாதிபதி காரணம் காட்ட கூடாது.

அர்ஜூன மகேந்திரன் மற்றும் உதயங்க வீரதுங்க ஆகிய இருவரும் நாட்டுக்கு விரைவில் அழைத்து வரப்படுவர். யாரும் தப்பிக்க முடியாது. பொலிஸார் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் உடந்தைகளாக செயற்பட்டு மக்கள் விடுதலை முன்னணி அரசியலமைப்பின் 20 ஆவது திருத்ததை கொண்டு வர முனைவதாகவும் இதற்கு சுமந்திரனின் தலையீடும் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் 20 ஆவது அரசியலமைப்பு திருத்ததை கொண்டு வந்தால் அதனால் மஹிந்த ராஜபக்ஷவே பயனடைவார்.ஏனெனில் தற்போதுள்ள ஜனாதிபதி முறைமை இருந்தால் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதி ஆக முடியாது. ஆனால் 20 ஆவது திருத்ததை கொண்டு நிறைவேற்று பிரதமராக ஆக முடியும்.” என்றார்

Leave a comment