பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல் வெகு விரைவில்!!!

269 0

மாகாண சபை தேர்தலை பழைய முறைமையின் பிரகாரம் உடன் நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இன்று ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

“வட மாகாணம் தவிர்ந்த ஏனைய 5 மாகாணங்களுக்கு தேர்தல் நடத்துவதாயின் டிசம்பரில் தேர்தல் நடத்த முடியும். இல்லையேல் ஜனவரியிலேயே தேர்தல் நடத்த முடியும்” என இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபை தேர்தலை பழைய முறைமையின் கீழே நடத்த வேண்டும் என சிறுப்பான்மை கட்சிகளும் தீர்மானம் எடுத்துள்ளமை விசேட அம்சமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையி்ல் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இதன்போது கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செயற்குழு கூட்டத்தின் போது சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. இதன்படி சமுர்த்தி பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே 2 இலட்சம் பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்க வேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் இன்றைய செயற்குழுவில் இன்னும் ஒரு இலட்சம் பேருக்கு சமுர்த்தி கொடுப்பனவு வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உடன் கவனம் செலுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் கம்பெரலிய திட்டத்தை துரிதமாக முன்னெடுக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அவசரமாக முன்னெடுக்க தொகுதி அமைப்பாளர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அவதானம் செலுத்த வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பாரிய அபிவிருத்தி திட்டங்களின் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேலும்  முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணை குறித்தும் அவர் மீது கட்சியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று விசாரணை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் மாகாண சபை தேர்தல் முறைமையை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. சிறுப்பான்மைகள் கட்சிகள் மாகாண சபை தேர்தலை பழைய முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என கடுமையாக வலியுறுத்தி வருகின்றது. மேலும் மாகாண சபை தேர்தலை பழைய முறைமையின் கீழ் நடத்த வேண்டும் என சிறுப்பான்மை கட்சிகள் கடந்த திங்கட்கிழமை கூடி கலந்துரையாடி தீர்மானமும் எடுத்திருந்தன.

இந் நிலையில் மாகாண சபை தேர்தலை பழைய முறைமையின் கீழ் உடன் நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியும் தீர்மானம் எடுத்துள்ளது.

மாகாண சபை தேர்தல் தொடர்பாக பிரதமரும் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். இதன்படி வட மாகாணம் தவிர்ந்து ஏனைய ஐந்து மாகாணங்களுக்கு தேர்தல் நடத்துவதாக இருந்தால் டிசம்பரில் தேர்தல் நடத்த முடியும். அப்படி அல்லாது வடக்குடன் இணைத்து ஆறு மாகாணங்களுக்கு தேர்தல் நடத்துவதாக இருந்தால் ஜனவரியிலேயே தேர்தல் நடத்த வேண்டி ஏற்படும் .எவ்வாறாயினும் உடன் தேர்தலை நடத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment