பண மோசடியில் ஈடுபட்ட ஆப்பிரிக்க பிரஜை கைது

245 0

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் தங்கியிருந்து பல்வேறு பண மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஆப்பிரிக்க பிரஜையொருவரை கைதுசெய்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்தவர்களிடம் ஆசைவார்த்தைகளை கூறி, வங்கிகளில் அவர்களது பெயரில் வங்கி கணக்குகளை ஆரம்பிக்கச் செய்துள்ளார். அதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்குகளின் மூலம் சந்தேகநபர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் இலங்கை பிரஜைகளுக்கு இணையத்தில் லொத்தர் பரிசு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ள சுங்கத்திற்கு வரிச் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்து, அப்பணத்தொகையை குறித்த வங்கி கணக்குகளுக்கு செலுத்துமாறும் கூறியுள்ளார்.

இவ்வாறு குறித்த வங்கி கணக்குகளுக்கு செலுத்தப்பட்ட பணத்தொகையை வங்கியிலிருந்து மீளப்பெற்றுக்கொள்வதற்காக நேற்று மாலை நான்கு மணியளவில் கம்பஹா பிரதேசத்தில் தனியார் வங்கியொன்றுக்கு சென்ற வேளையிலேயே கம்பஹா பொலிஸார் அவரைக் கைதுசெய்தனர்.

இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து இலங்கையர்கள் சிலரின் பெயர்களில் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகங்களும், அதற்கு பயன்படுத்தக்கூடிய வங்கி அட்டைகளும், அதன் மூலம் பெறப்பட்ட ஒரு இலட்சத்து 13 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டன.

கம்பஹா பொலிஸார் அவரை நேற்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி, மேலதிக விசாரணைகளுக்காக குற்றவியல் விசாரணை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment