பல்லினத் தன்மையை ஏற்றுக் கொண்டு அதற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படும் போதே பிரச்சினையற்ற ஒரு சூழலை ஏற்படுத்த முடியும் எனவும், இதனை இந்த நாட்டிலுள்ள சிங்களவர்களும், தமிழர்களும், முஸ்லிம்களும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
எந்த இனத்துக்கும் தமது மொழி, தமது மதம், தமக்கான சுதந்திரம், தனித்துவம் என்பது மிக அவசியமானதாகும். சமூகம், நாடு என்ற வகையில் பல்வகைத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதனை கௌரவிக்க வேண்டும். எச்சந்தர்ப்பத்திலும் அதற்குப் பாதிப்பு ஏற்படுத்தப்படக் கூடாது.
இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் சமாதானத்துக்கு எதிரானவர்கள் என்பதே உலகளவில் உள்ள நிலைப்பாடாகும். தாம் பயணித்துள்ள பல்வேறு நாடுகளில் இது தொடர்பில் தம்மிடமே அங்குள்ள தலைவர்கள் விசாரித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையிலுள்ள பெருமளவிலான பௌத்த துறவிகள் நல்லவர்கள். சமாதானத்தை விரும்புகிறவர்கள். எனினும் சிலர் அடிப்படைவாதிகள். ஒரு பௌத்த தேரர் எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் அடிப்படைவாதியாக இருக்கக் கூடாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வமதப் பேரவை மாநாட்டில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.