தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உண்மை எனில் பள்ளியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜூ என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், பொருளாதார ரீதியாக நலிந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயில இலவச கட்டாய கல்வி உரிமை திட்டத்தினை தமிழக அரசு வழங்குகிறது. இத்திட்டம் இலவசமாக தனியார் பள்ளிகளில் கல்வி பயில வழி செய்கிறது.ஆண்டுக்கு இரண்டு லட்சத்திற்கும் குறைவாக வருவாய் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தபட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோர் வகுப்பை சேர்ந்த குழந்தைகள் இந்த இலவச கல்வியால் தனியார் பள்ளிகளில் பயின்று பயன்பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அந்த மனுவில் இத்திட்டம் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கபட்டு இலவச கல்வி அளிக்கபடுகிறது.இந்த இலவச கல்வி திட்டத்தின்படி தனியார் பள்ளிகள் அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் குழந்தைகள் எல்,கே.ஜி மற்றும் 1 ஆம் வகுப்பில் சேர்ந்து 8 ஆம் வகுப்பு வரை படிக்கலாம் என்பது இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.இத்திட்டத்தின் படி ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் எச்.ஐ.வி.யால் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.மேலும் திருநங்கைகளின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கபடும்.இவ்வாறு சேரும் குழந்தைகளுக்கு கட்டணம்,சீருடை,நோட்டு புத்தகம் மற்றும் முழு கல்வி கட்டணத்தையும் அரசே செலுத்திவிடும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,நீதிபதி நிஷா பானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்த முடியாத வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை இத்திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர்த்து பயன்பெறுகின்றனர். இலவச கல்வி திட்டத்தின்கீழ் சேரும் குழந்தைகளிடம் இருந்து அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயிலும் குழந்தைகளிடம் கட்டாயமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களை மிரட்டி கட்டணம் செலுத்தவில்லை என்றால் மாணவர்களுக்கு புத்தகம்,சீருடை உள்ளிட்டவற்றை கொடுக்க மறுக்கின்றனர் என குற்றம் சாட்டினார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தமிழகத்தில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் அவர்களது உத்தரவில்
*கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகள் விளக்கமளிக்க வேண்டும்.
*தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உண்மை எனில் பள்ளியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*தேவைப்பட்டால் பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
*இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 6 முதல் 14 வயது வரை உள்ளவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதை மத்திய,மாநில அரசுகள் உறுதிபடுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை முடித்துவைத்தனர்.