சிகிச்சையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் புவனேசுவரி சங்கர், செவிலியர் ராஜேசுவரி ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
ஊட்டச்சத்து நிபுணர் புவனேசுரி சங்கர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சர்க்கரை நோய் நிபுணர் ஜெயஸ்ரீகோபால் அறிவுரைப்படி ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்பதை நான் தான் பரிந்துரைத்தேன். ஜெயலலிதாவுக்கு முதல் 2 நாட்கள் மருத்துவமனையில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகள் கொடுக்கப்பட்டன.
மருத்துவமனையில் தயாரித்த உணவு தனக்கு பிடிக்கவில்லை என ஜெயலலிதா கூறியதை தொடர்ந்து அவரது சமையல்காரர் மூலம் மருத்துவமனை சமையல் அறையில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
எனது பரிந்துரையின் பேரில் அளிக்கப்பட்ட சில உணவுப்பொருட்களை ஜெயலலிதா சாப்பிட மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து ஜெயலலிதா விருப்பத்தின் பேரில் மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் அறிவுரைப்படி கிச்சடி, தயிர்சாதம், உருளைக்கிழங்கு வருவல், பிங்கர் சிப்ஸ், கப் கேக், திராட்சை பழம், மாம்பழம், கொய்யாப்பழம், ஆப்பிள், மாதுளை, மலை வாழைப்பழம், ஐஸ்கிரீம், இளநீர், லட்டு, ஜாங்கிரி, பாதாம் அல்வா போன்ற உணவுப்பொருட்களை ஜெயலலிதா எடுத்துக்கொள்ள அனுமதித்தேன்.
இந்த உணவு வகைகள் அனைத்தும் ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், கலோரியை கணக்கிட்டும் தான் வழங்கப்பட்டது. இதனால், ஜெயலலிதாவின் உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஆணையம் தரப்பில் கூறப்பட்டது.
செவிலியர் ராஜேசுவரி அளித்த வாக்குமூலத்தில், ‘பெரும்பாலான நாட்கள் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருந்தது. நான் பணியில் இருந்த போது ஜெயலலிதாவை பார்ப்பதற்காக கவர்னர் வித்யாசாகர்ராவ் 2 முறை மருத்துவமனைக்கு வந்தார். முதல்முறை வந்த போது ஜெயலலிதாவுக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. இதனால், ஜெயலலிதா அவரை பார்க்கவில்லை. 2-வது முறை வந்தபோது பிசியோதெரபி சிகிச்சையில் இருந்தார். இதனால், அப்போதும் கவர்னரை ஜெயலலிதா பார்க்கவில்லை. ஜெயலலிதாவை கவர்னர் இருமுறை பார்க்க வந்த விவரத்தை அவரிடம் யாரும் கூறவில்லை’ என்று கூறி உள்ளதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.