யாழ்ப்பாணக் கோட்டையை இராணுவத்திற்கு வழங்க முடியாதென்றும் கோட்டைக்குள்ளிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென்றும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் மாவட்டச் செயல கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது தொல்லியல் ரீதியான முன்னேற்றங்களின் போது யாழ். ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினருக்கு காணி வழங்கும் விடயம் தொடர்பிலும் அங்கு இராணுவத்தினர் முகாம் அமைப்பது தொடர்பிலும் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், யாழ் துரையப்பா விளையாட்டரங்கின் புனரமைப்பின்போது பாரிய இடையூறுகளை விளைவித்த தொல்லியல் திணைக்களம் தற்போது கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைப்பதை எவ்வாறு அனுமதித்தது என பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதன் போது அங்கு பிரசன்னமாகியிருந்த தொல்லியல் திணைக்கள அதிகாரி கோட்டையின் ராணி மாளிகை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆதனால் அந்த மாளிகைக்கு அருகில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டுள்ளது.
அங்கு இருந்த அந்த முகாமில் ஏற்கனவே இராணுவம் இருந்ததால் அவர்கள் வேறு இடத்திற்கு மாறி அங்கு தங்குவதற்கான தற்காலிக முகாமையே தற்போது அமைத்து வருகின்றனர் என்றார்.
அதற்கு, கோட்டையில் எவ்வித இராணுவமும் தங்குவதை நாம் அனுமதிக்க முடியாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்ததுடன் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்வரை பொலிஸாரை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதுடன் புனரமைப்பு நிறைவடைந்த பின்னர் பொலிஸாரும் வெளியேறி கோட்டை முழுமையாக தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என தெரிவித்தார்
அத்தோடு அங்கு இராணுவம் இருப்பதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி கொடுத்து வருகிறது. ஆனால் அங்கு இராணுவம் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆகையினால் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும். ஏனெனில் இராணுவத்தினருக்கு இடம் கொடுப்பதானது ஒட்டகத்திற்கு இடம் கொடுத்ததாகவே அமையுமென்றும் சுட்டிக்காட்டினார்.