தங்கத் தட்டில் சாப்பிடும் ஆசை பலருக்கு வெறும் கனவாக மட்டுமே இருக்கும் நிலையில் சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் தங்கத்தால் ஆன கட்டணக் கழிப்பறை அமெரிக்காவில் திறக்கப்பட்டுள்ளது.
லட்சங்களிலும், கோடிகளிலும் புரள்கிற பெரும்பணக்காரர்கள் தங்கத்தினாலும், வெள்ளியினாலும் செய்யப்பட்ட தட்டுகளில் சாப்பிடுவது உண்டு. அதை அவர்கள் பெருமையாக கருதுவதும் உண்டு.
இதைத்தான், ஆங்கிலத்தில் ’பார்ன் வித் எ சில்வர் ஸ்பூன்’ (பிறக்கும்போதே வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்கள்) என்று கூறுவார்கள்.
ஆனால், பிறவியாலும், பொருளாதார தகுதியாலும் மனிதர்களுக்குள் நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளை பலர் சபித்து வருகின்றனர். இருப்பவர்கள் அனுபவிக்கும் எல்லா வசதிகளையும் இல்லாதவர்களான ஏழைகளும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் கம்யூனிச சித்தாந்தத்தின் மூலக்கூறாக உள்ளது.
இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ள சாலமன் ஆர். குகென்ஹெயிம் அருங்காட்சியகத்தில் பணக்காரர்கள் மட்டுமின்றி, சாமானியர்கள்கூட உரிய (25 டாலர்) நுழைவுக்கட்டணம் செலுத்தி பயன்படுத்தத்தக்க தங்கத்தாலான கழிப்பறை திறக்கப்பட்டுள்ளது.
இந்த கழிப்பறையின் தங்க இருக்கையை 18 கேரட் தங்கத்தைக் கொண்டு, இத்தாலி நாட்டின் மிலான் நகரை சேர்ந்த கலைஞர் மவுரிசியோ கேட்டலான் (வயது 55) வடிவமைத்து உள்ளார். இந்த கழிப்பறைக்கு ‘அமெரிக்கா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.குகென்ஹெயிம் அருங்காட்சியகத்துக்குள் வர நுழைவுக்கட்டணம் செலுத்தும் எவரும் இந்தக் கழிப்பறையை அவர்கள் விருப்பப்படி பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் தங்கத்தால் ஆன கழிப்பறையை பயன்படுத்தி வருவதாக ஒரு தகவல் உலவிவரும் நிலையில் பொருளாதார சமத்துவமின்மையால் உந்தப்பட்டு, இந்த படைப்பை உருவாக்கி உள்ளதாக இந்த தங்கக் கழிப்பறையை வடிவமைத்துள்ள கேட்டலான் கூறி உள்ளார்.