முள்ளந்தண்டு பாதிப்புக்கு உள்ளாகி இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத முன்னாள் போராளி ஒருவரை கட்டிலில் சங்கிலியுடன் பிணைத்து, யாழ்.சிறைச்சாலை நிர்வாகம் சிகிச்சை அளித்து வருவது தொடர்பில் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியை சேர்ந்த குமாரசாமி பிரபாகரன் எனும் மாற்று திறனாளிக்கே கட்டிலில் சங்கிலியால் பிணைத்து வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தர்மபுரம் பொலிசாரினால் கடந்த 18ஆம் திகதி பிரதீபன் கைது செய்யப்பட்டார். மறுநாள் 19ஆம் திகதி கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை நீதிவான் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அந்நிலையில் அன்றைய தினம் இரவு , ஏழு மணியளவில் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார். சிறைச்சாலைக்குள் சக்கரநாற்காலியில் செல்வதற்கு உரிய வழிகள் இல்லாமையால் அவரை தூக்கி சென்று சிறைக்கூடத்தில் படுக்க வைத்துள்ளார்கள் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள்.
இடுப்புக்கு கீழே இயங்க முடியாத மாற்று திறனாளியான அவர் , மாற்று திறனாளிகளுக்கு உரிய முறையில் சிறைக்கூடம் இல்லாமையால் இயற்கை கடன்களை கழிக்க முடியாது திண்டாடியுள்ளார்.
அத்துடன் நீண்ட நேரமாக தரையில் படுத்து இருந்தமையால் காலில் உள்ள காயங்களில் ஈக்கள் மற்றும் எறும்புகள் தொற்றி காயங்களின் வேதனையை அதிகரித்து உள்ளது.
அதனால் மறுநாள் 20ஆம் திகதி சிறைச்சாலை வைத்திய அதிகாரியிடம் முறையிட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தர்மபுரம் பொலிசாரினால் 18ஆம் திகதி கைது செய்யப்பட்ட பின்னர் , பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் இருந்த போதும் அங்கும் மாற்று திறனாளிகளுக்கு உரிய முறையிலான மல சல கூடங்கள் இல்லாமையால் இயற்கை கடன்களை கழிக்க முடியாது திண்டாடியுள்ளார் , யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 20ஆம் திகதிக்கு பின்னரே இயற்கை கடன்களை கழிக்க முடிந்துள்ளது.
அதேவேளை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் போது சந்தேக நபரான பிரபாகரனை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் கட்டிலில் சங்கிலியால் பிணைத்து வைத்தே சிகிச்சை பெற அனுமதித்துள்ளனர். இடுப்புக்கு கீழே இயங்க முடியாது சக்கர நாற்காலியின் உதவியுடன் நடமாடும் அவரை மனிதாபிமானமற்ற முறையில் கட்டிலில் விலங்கிட்டு சங்கிலியால் பிணைத்து சிகிச்சை அளிப்பது தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.