பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை – விஜயதாச

243 0

உயர்கல்விக்காக வெளிநாடு சென்று நாடு திரும்பாத சுமார் 500 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உயர்கல்வியைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்கள் பணியாற்றிய பல்கலைக்கழகங்களில் இருந்து விசேட விடுமுறையில் வெளிநாடு சென்ற நூற்றுக்கணக்கான விரிவுரையாளர்கள், அவர்களது விடுமுறை காலம் நிறைவடைந்த நிலையில் நாடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதுத் தொடர்பில் அறிவுறுத்தல் விடுத்தபோதிலும் அவர்கள் அதனைக்கண்டுகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில விரிவுரையாளர்கள் அவர்கள் கல்வி பயின்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலேயே தொழில்வாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நாடு திரும்பாத பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்குப் பதிலாக பகுதி நேரமாகக் கடமையில் ஈடுபடும் விரிவுரையாளர்களுக்குக் கூடுதலான தொகையைக் கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இதேவேளை, உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்குக் கடுமையான விதிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தகவல்களுக்கு அமைய, 486 விரிவுரையாளர்களின் கல்வி, போக்குவரத்து, பாடநெறிக் கட்டணம் மற்றும் இதர செலவுகள் உள்ளடங்களாக 800 மில்லியன் ரூபாயினை அரசாங்கம் செலவிட்டுள்ளது.

குறித்த 486 பேரும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, கனடா, நோர்வே, சுவீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு உயர்கல்விக்காகச் சென்றதோடு, நாடு திரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment