வெளிநாட்டுத் தாள்கள் ஒரு தொகையை சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூரிற்கு எடுத்துச் செல்ல முற்பட்ட அந்நாட்டுப் பொறியியலாளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
43 வயதுடைய சிங்கப்பூர் பிரஜை ஒருவரே இன்று அதிகாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
1,53,04,085 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களே குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் இன்று அதிகாலை 1.55 மணியளவில் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 306 என்ற விமானத்தில் சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் எடுத்து வந்த பயணப்பையில் இருந்து 50,000 யூரோக்கள் மற்றும் 50,000 புருனாய் டொலர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொறியியலாளர் கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதாகச் சுங்க அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.