இலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கை சம்பந்தமாக பொய் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் அரச பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியை அடிப்படையாக வைத்தே உரையாற்றியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள அமைச்சர் மலிக் சமரவிக்ரம தற்போது பயம் மற்றும் குழப்பமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடன் தனிப்பட்ட கோபங்கள் எதுவுமில்லை என்றும், அவரை ஏதோ ஒரு தரப்பு அல்லது அதிகாரி அல்லது வெளிநாட்டு சக்திகள் ஊடாக வழிதவறச் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை கடந்த ஆண்டு இலங்கை 650 மில்லியன் அமெரிக்க டொலர் தங்கம் இறக்குமதி செய்திருந்ததாகவும், அது இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட அதிக தொகையான தங்கம் என்றும், அது 2016ம் ஆண்டை விட நூற்றுக்கு 73.7 வீதம் அதிகமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
2018ம் ஆண்டின் முதல் காலாண்டில் 437 மில்லியன் அமெரிக்க டொலர் தங்கம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அது 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 126 அதிகமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.