செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டை அகழ்ந்தெடுக்கும் பணிகளிலும் எலும்புகளைப் பகுப்பாய்வு செய்யும் பணிகளிலும் பன்னாட்டு நிபுணர்கள் குழுவை அனுமதிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சோ.சேனாதிராசா.
‘‘இலங்கை இராணுவத்தால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களை அம்பலப்படுத்துவதற்கு, அவற்றை ஆதாரத்துடன் உலக நாடுகள் அறிவதற்கு தற்போது வடக்கு மாகாணத்தில் மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகளும் ஒரு சாட்சி. எனவே அவற்றைப் பகுப்பாய்வு செய்து போர்க்குற்றத்தை நிரூபிக்க பன்னாட்டு நிபுணர் குழுவை அரசு அனுமதிக்க வேண்டும்’’ என்றார் அவர்.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் முடிவில் ஊடகவியலாளர்களிடம் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான செம்மணியில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புக்கூடு கண்டறியப்பட்டது. தண்ணீர்த் தாங்கி அமைப்பதற்காக அங்கு குழி தோண்டியபோது இந்த எலும்புக்கூடு கண்டறியப்பட்டது.
வடக்கு மாகனத்தின் பல பிரதேசங்களிலும் அண்மைய நாள்களாக மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த நாட்டில் எந்தளவுக்கு மனிதப் படுகொலை இடம்பெற்றுள்ளது என்ற உண்மைகள் இப்போது மெல்லமெல்ல வெளிவரத் தொடக்கி விட்டன.
எனவே அரசு இந்த விடயத்தில் நேர்மையாகச் செயற்பட வேண்டும். அதற்கு இங்கு உடனடியாக வெளிநாட்டு நிபுணர் குழுவைப் பகுப்பாய்வுக்காக அனுமதிக்க வேண்டும். போரின்போதும் அதற்கு முன்னைய காலத்திலும் எத்தனையோ தமிழர்கள் காணாமல் ஆக்கப்படுள்ளனர், கைது செய்யப்பட்டு காணமல் போயுள்ளனர்.
அவ்வாறானவர்களும் இறந்திருக்கலாம் எனக் கூறபட்டுவரும் நிலையில் மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகள் யாருடையது என்பது துல்லியமாகக் கண்டறியப்பட வேண்டும். அத்துடன் இந்த எலும்புக் கூடுகள் மீட்கப்படுவதையும் அது யாருடையது என்பதையும் நாமும் உலகமும் அறிய வேண்டும். இலங்கையில் போர்க் குற்றம் நடந்தது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியாகும்.
பன்னாட்டு நிபுணர்கள் ஆய்வு செய்து உண்மையைக் கூறுவதன் மூலமே போர்க் காலத்திலும் அதற்கு முன்னரும் இலங்கை இராணுவத்தினர் எந்தளவுக்கு போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபிக்க முடியும். எனவே இதனை நாம் முறையாக அணுக வேண்டும் என்றார்.